பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு வெளியானது
பால்மாவின் விற்பனை விலையை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதி நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூட்டுறவு சேவைகள், சந்தை மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சந்தையில் தற்போது பால்மா மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
அரசாங்கத்தின் பலவீனமான முகாமைத்துவத்தினால் இவ்வாறான பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது என குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கோவிட் -19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக இவ்விரு பொருட்களின் விலை உலக சந்தையில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே நிறுவனத்தினர் விலை அதிகரிப்பு குறித்து கோரிக்கையினை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.
சந்தையில் பால்மாவிற்கான தட்டுப்பாடு காணப்படுகிறது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறக்குமதி செய்யப்படும் 985 ரூபா பெறுமதியான 1 கிலோ கிராம் பால்மாவின் விலை 945 ரூபாவாக குறைக்கப்பட்டது.
இதன் காரணமாக தாம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டார்கள். ஆகவே ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை 275 ரூபாவிலும், 385 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் பால்மாவின் விலையை 110 ரூபாவிலும் அதிகரிக்க நிறுவனத்தினர் அனுமதி கோரினார்கள்.
நாட்டு மக்கள் கோவிட் தாக்கத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பால்மாவின் விலையை அதிகரிக்க முடியாது என்று அரசாங்கம் உறுதியாக குறிப்பிட்டுள்ளது.
பால்மா இறக்குமதிக்கான வரிகளை நீக்க தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் அதற்கும் பால்மாவிற்கான இறக்குமதி நிறுவனத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.
இதன் காரணமாகவே சந்தையில் பால்மாவிற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதால், லாப் ரக எரிவாயு சிலிண்டரின் விற்பனை விலையை அதிகரிக்குமாறு நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
12 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரை 1,988 ரூபாவிலும், 5 கிலோகிராம் எடையுள்ள சிலிண்டரை 788 ரூபாவிலும் அதிகரிக்குமாறு நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்தார்கள்.
இக்கோரிக்கை தொடர்ந்து பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாகவே சந்தையில் எரிவாயு சிலிண்டர் பெறுகையில் தட்டுப்பாடு ஏற்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.