கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமான பயணிகளின் நிலை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த Aeroflot விமானத்தின் பயணிகள் நாளை மற்றும் நாளை மறுதினம் விமானங்கள் மூலம் மொஸ்கோவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
Aeroflot நிறுவனத்தின் இலங்கை அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மொஸ்கோ நோக்கி புறப்படவிருந்த விமானம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட அனுமதிக்கப்படாமல் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
விமான பயணிகளின் நிலை
விமான குத்தகை நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, Aeroflot விமானம் நாட்டிலிருந்து புறப்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை இடைநிறுத்துமாறு ரஷ்ய விமான நிறுவனம் விடுத்த கோரிக்கையை எதிர்வரும் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை்கை வழங்கிய உறுதிமொழி
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்தக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் இருதரப்பு உடன்படிக்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு விமானங்கள் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.