இலங்கையில் தடுத்து நிறுத்தப்பட்ட ரஷ்ய விமானம் - இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரஷ்ய விமானம் ஒன்று தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீறப்பட்ட உறுதி மொழி
ரஷ்ய நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களை தடுத்து நிறுத்தி வைக்க மாட்டோம் என உறுதிமொழிக்கு அமையவே தாம் இலங்கைக்கு பயணம் செய்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சூழலில் விமானத்தை தடுத்து நிறுத்தி வைப்பது சிக்கலாக இருப்பதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொஸ்கோ நோக்கி புறப்படவிருந்த 191 பயணிகள் பயணிக்கக்கூடிய விமானம் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு எதிர்வரும் 16ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஏழு முறை பறந்த விமானம்
அயர்லாந்தில் உள்ள செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் லிமிடெட் தாக்கல் செய்த முறைப்பாட்டிற்கமைய, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க, பிரதிவாதியான ரஷ்ய விமான சேவைக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விமானம் இதற்கு முன்னர் ஏழு முறை இலங்கைக்கு பறந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானம் இன்று மதியம் 12.50 மணியளவில் ரஷ்யாவின் மொஸ்கோ நகரத்திற்கு புறப்பட இருந்தது.
எனினும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மொஸ்கோவிற்கு செல்ல தயாராக இருந்த 191 பயணிகள், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.