வெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் - தந்தையின் உருக்கமான கோரிக்கை
கட்டாருக்கு தொழிலுக்கு சென்ற இலங்கை இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள நிலையில், அவரின் தந்தை அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பொல்பித்திகம பிரதேசத்தில் இருந்து புதிய வீடு கட்டும் கனவை நிறைவேற்ற கட்டார் சென்ற இளைஞன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கடந்த 13ஆம் திகதி காலை புத்தாண்டு தினத்தன்று கிடைத்த செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை என உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.
தந்தையின் கோரிக்கை
எனது மகனின் சடலத்தை எனது கண்களால் பார்க்கும் வரை என்னால் அதனை நம்ப முடியாது. எனது மகனின் சடலத்தை கொண்டு வர உதவுங்கள் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
27 வயதான ஜனக சதுரங்க செனவிரத்ன என்ற இளைஞன் இலத்திரனியல் வேலைக்காக கட்டார் சென்றுள்ளார்.
எங்கள் குடும்பத்தில் 3 பிள்ளைகள். மூத்த மகனே உயிரிழந்துள்ளார். அவருக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் உள்ளனர். என் மகன் இதற்கு முன்னரும் வெளிநாட்டில் பணியாற்றினார்.
பின்னர் கடந்த ஆண்டு இலங்கையில் வேலை இல்லாததால் கட்டாருக்கு சென்றார். நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டின் மிகுதி வேலைகளை முடிக்க பணத்தைத் தேடிய பின்னர் நாட்டிற்கு வருவதாக கூறினார்.
தொலைபேசி உரையாடல்
இறுதியாக 12ஆம் திகதி தனது காதலியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென எவ்வித சத்தமும் கேட்டாமல் போனதாக காதலி கூறினார்.
சார்ஜரில் கையடக்க தொலைபேசியை பொருத்திய நிலையில் தொலைபேசியில் பேசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நண்பர் ஒருவர் 13ஆம் திகதி கூறினார்.
மின்சாரம் தாக்கியிருந்தால் கையடக்க தொலைபேசி எரிந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனது மகன் உயிரிழந்துள்ளதாக இலங்கை தூதரகம் உறுதி செய்துள்ளது.
எனினும் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரிவிக்கவில்லை. உடலை விரைவில் நாட்டுக்கு கொண்டு வருமாறு தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.