கட்டாரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கையர்!
இலங்கையர் ஒருவர் கட்டாரில் உண்ணாவிரப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருவதாக பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அமைப்பு ஒன்று தெரிவிக்கின்றது.
கட்டாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜை ஒருவரே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தம்மை சட்டவிரோதமான அடிப்படையில் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்து அதனை எதிர்த்து குறித்த இலங்கையர் போராட்டத்தில் குதித்துள்ளார்.
இதற்கு முன்னரும் குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்ட சில மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஆர் பாஹஸீ என்ற நபரே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார் அந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மீண்டும் இவரை கைது செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் 1ம் திகதி முதல் குறித்த நபர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உணவு தவிர்ப்பு போராட்டத்தினால் குறித்த இலங்கையர் 13 கிலோ கிராம் எடை குறைந்துள்ளார் என பிரித்தானிய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டவிரோத கைது மற்றும் பலவந்தமான தடுத்து வைத்தல் மனித உரிமை மீறல் என பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் கேஜ் கேஸ்வர்க் என்ற அமைப்பின் முகாமையாளர் நய்லா அஹமட் தெரிவி;த்துள்ளார்.
தனது கணவர் நீண்ட நாட்களாக எவ்வித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும் பஹாஸீயின் மனைவி தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இந்த கைது விவகாரம் தொடர்பில் கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் இதுவரையில் எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்புக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.