சீஷெல்ஸ் கடல் மண்டலத்திற்குள் அழிக்கப்பட்ட இலங்கை படகு : நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம்
சீஷெல்ஸ்(Seychelles) கடல் மண்டலத்திற்குள் ஒரு வெளிநாட்டு கடற்றொழில் கப்பலைக் கைப்பற்றி அழித்தமை தொடர்பாக சீஷெல்ஸில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை, இலங்கை வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
தீ வைக்கப்பட்ட கடற்றொழில் கப்பல்
கடந்த 2025, டிசம்பர் 07 ஆம் திகதி அன்று வென்னப்புவ வெல்லமன்கராய கடற்றொழில் துறைமுகத்திலிருந்து ஆறு கடற்றொழிலாளர்களுடன் புறப்பட்ட ‘இஷானி-1’ என்ற கடற்றொழில் கப்பல், டிசம்பர் 30 ஆம் திகதி அன்று சீஷெல்ஸ் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த கப்பல் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், சீஷெல்ஸ் பாதுகாப்புப் படையினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை இலங்கை அதிகாரிகள் கவனத்திற்கு சென்றுள்ளது.
இதன்போது, இந்த நிலைமையை கூர்ந்து கண்காணிக்க சீஷெல்ஸில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கப்பலில் இருந்த இலங்கை கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான தூதரக உதவி ஏற்கனவே ஏற்பாடு செய்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
