அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்த இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவை நோக்கி படகில் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், கடந்த 9ம் திகதி அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 45 தஞ்சக்கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கையிலிருந்து படகு வழியாக அவுஸ்திரேலியாவுக்கு வர முயன்று கிறிஸ்துமஸ் தீவு அருகே இடைமறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், இப்படகு எப்போது அவுஸ்திரேலியா கடல் பகுதிக்குள் நுழைந்தது என்பது தெரியவில்லை.
தஞ்சக்கோரிக்கையாளர்களுடன் நுழைந்த படகு
ஆனால், இவர்களின் படகு இடைமறிக்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் படகில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது.
அதே போல், அவுஸ்திரேலிய கடல் பகுதிக்குள் 15 தஞ்சக்கோரிக்கையாளர்களுடன் வந்த மற்றொரு படகும் அவுஸ்திரேலிய எல்லைப்படையால் தடுத்து நிறுத்தப்பட்டு, அதிலிருந்தவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மொத்தம் இரண்டு படகுகள் இடைமறிக்கப்பட்டு, இலங்கை அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பு
நாடு கடத்தப்பட்ட அனைவரும் இலங்கையின் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டிலேயே புதிதாக ஆட்சி வந்துள்ள அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் இருந்து வருகிறது.
இந்த கொள்கையின் அடிப்படையிலேயே அவுஸ்திரேலியாவில்
தஞ்சமடையும் இலங்கை அகதிகள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர் என்பது
இங்கு குறிப்பிடத்தக்கது.