சர்வதேச சிவப்பு பிடியாணை ஊடாக ஹரக் கட்டா உள்ளிட்ட 8 பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை
சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் பலமானவரும், பாதாள உலகக் கும்பலின் முக்கிய தலைவருமான 'ஹரக் கட்டா' துபாய் விமான நிலையத்தில் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ''ஹரக் கட்டா'' என்றழைக்கப்படும் நதுன் சிந்தக உள்ளிட்ட 08 பேரை துபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
சர்வதேச சிவப்பு பிடியாணை
இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஹரக் கட்டாவை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான சர்வதேச சிவப்பு பிடியாணைக்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போலி கடவுச்சீட்டில் துபாய் தப்பிச் சென்றவர்
துபாய் விமான நிலையத்தில் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஹரக் கட்டா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் போலி கடவுச்சீட்டில் துபாய் தப்பிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஹரக் கட்டாவின் மனைவி என கூறப்படும் பெண் ஒருவரும், 'ஜிலே' என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.