யார் இந்த ஹரக் கட்டா - துபாயில் கைது செய்யப்பட்ட இலங்கையரின் பின்னணி
சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் பலமானவரும், பாதாள உலகக் கும்பலின் முக்கிய தலைவருமான 'ஹரக் கட்டா' எனப்படும் நதுன் சிந்தக, துபாய் விமான நிலையத்தில் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவரது மனைவி என கூறப்படும் பெண் ஒருவரும், 'ஜிலே' என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் கைது செய்யப்பட்டுள்ள ஜிலே என்ற நபர் கொட்டிகாவத்தை முல்லேரிய பிரதேச சபை உறுப்பினர் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பிரதான ஹெரோயின் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலின் தலைவருமான 'ஹரக் கட்டா' எனப்படும் நதுன் சிந்தக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் போலி கடவுச்சீட்டில் துபாய் தப்பிச் சென்றுள்ளார்.
துபாயில் இருந்து மலேசியா செல்ல முயற்சி
ரொஷான் இஷங்க என்ற உயிரிழந்த நபரின் பெயரில் வழங்கப்பட்ட விமான அனுமதிப்பத்திரத்தில் அவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி டுபாயில் இருந்து மலேசியா செல்வதற்காக ஹரக் கட்டா தனது மனைவி என கூறப்படும் பெண் ஒருவருடன் நேற்று துபாயில் உள்ள விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக அந்நாட்டு போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, போலி விமான அனுமதிச் சீட்டு பற்றிய தகவல் துபாய் குடிவரவு அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது, அங்கு ஹரக் கட்டா, அவரது மனைவி என்று கூறப்படும் பெண் மற்றும் மற்றொரு நபர் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
'ஹரக் கட்டா' துபாயில் இருந்து இலங்கைக்கு பல சந்தர்ப்பங்களில் ஹெரோயின் போதைப்பொருளை பல்வேறு முறைகளில் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென் மாகாணத்தை மையமாக வைத்து 20க்கும் மேற்பட்ட கொலைகள் 'ஹரக் கட்டா' தலைமையில் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிப்பு
அண்மையில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் 'ஹரக் கட்டா' செயற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதன்படி, அவரை கைது செய்ய சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அவர் போலி கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட போதிலும், அது 'ஹரக் கத்தா' என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹரக் கட்டாவுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றைய நபர் கொட்டிகாவத்தை முல்லேரிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் சுமுது ருக்ஷானின் கொலைக்கு தலைமை தாங்கியவர் என சந்தேகிக்கப்படுகின்றது.