ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் மற்றுமொரு கட்டம்! சமீர பெரேரா குற்றச்சாட்டு
பௌத்த மதத்தையும், சிங்கள பௌத்த அரசையும் பாதுகாப்பதாக கூறி முன்னெடுக்க முயற்சிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் மற்றுமொரு கட்டம் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹட்டன் நகரில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முயன்ற குழு
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் நாட்டு மக்களைப் பல்வேறு வழிகளில் பாதிப்புக்குள்ளாக்கி, மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்ற அரசியல் குழுவொன்றின் வழிநடத்தலிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கிங்ஸ்பரி பஞ்சமுக ஹோட்டலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரகசியக் கலந்துரையாடல் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகிய தகவல்கள், இந்த அரசியல் சதித்திட்டம் குறித்த சந்தேகங்களை உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான டேனியல் நோல் ஜெனஸ்டன் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.