மட்டக்களப்புக்கு கிழக்காக சூறாவளி சாத்தியம்: மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு திசையில் நகர்ந்து ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து, நேற்று அதே பிராந்தியத்திற்கு மேலாக மட்டக்களப்புக்கு கிழக்காக சுமார் 900 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
இத்தொகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இன்றைய தினம் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அக்டோபர் 27ஆம் திகதி காலையளவில் தென்மேற்கு மற்றும் அண்மையாகவுள்ள மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு சூறாவளியாகவும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான காலநிலை தொடர்பில் நேற்று பிற்பகல் இரண்டு மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும், அதன்பின் தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் ஆந்திரப் பிரதேசக் கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் கடற்தொழிலாளர்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மழை நிலைமை
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 - 40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam