தொற்றுநோய்களின் போது ஆடைத் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்!
கோவிட் தொற்றுநோய்களின் போது இலங்கை அரசாங்கம் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள், ஆடைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று கோரியுள்ளது.
கோவிட் தொற்றுகளின் புதிய அலைகளைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் 2021ம் ஆண்டு மே 21 ஆம் திகதிக்கு பின்னர் கடுமையான முடக்கல் மற்றும் பொதுக்கூட்டங்கள், பயணத் தடைகள் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளைப் பயன்படுத்தியது.
இருப்பினும், ஆடைத் தொழிற்சாலைகள் வழமையான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டார்.
இந்தநிலையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர், தொழிற்சாலைகளிலும், தொழிலாளர்கள் வசிக்கும் நெரிசலான வாடகை வீடுகளிலும் ஏராளமான வைரஸ் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கை அளித்துள்ளனர்,
மேலும் உற்பத்திகளை பராமரிப்பதற்காக, முதலாளிகள் சோதனைகளை மேற்கொள்ளவில்லை என்றும் குறைவான தொற்றாளிகளே இருப்பதாகவும் தெரிவித்து வருவதாக சுகாதார ஆய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே இலங்கையின் ஆடைத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக வேலை செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு, அவர்கள் நோய்வாய்ப்பட்டாலும் அல்லது தனிமைப்படுத்த வேண்டியிருந்தாலும் கூட அவர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுவது உறுதிச் செய்யப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கோரியுள்ளார்.
இலங்கை அரசாங்கமும் முதலாளிகளும் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களையும் வழிகாட்டுதல்களையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளில் கோவிட் நோய்த்தொற்றுகள் குறித்து வெளிப்படையாக இருக்க வேண்டும், மேலும் தொழிலாளர்களின் நலனுக்காக வசதிகளை வழங்க வேண்டும் என்றும் மீனாட்சி கங்குலி கேட்டுள்ளார்.
இலங்கையில் ஏழு பெண்களில் ஒருவர் ஆடைத் துறையில் பணிபுரிகிறார் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் முதல் ஆடைத் தொழிற்சாலைகளில் மீண்டும் மீண்டும் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன.
எனினும் நான்கு அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர் உரிமை ஆர்வலர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் தொழிற்சாலை மேலாளர்கள் போதுமான தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் பணியாற்றுமாறு தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக முறையிட்டுள்ளதாக மீனாட்சி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2021, ஜூலை 8ம் திகதி கொழும்பில் நடந்த தொழிலாளர் உரிமை போராட்டத்தில் தொழிற்சங்கவாதிகள் தடுத்து வைக்கப்பட்டு, கோவிட் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டமையை அவர் கண்டித்துள்ளார்.
பொது சுகாதார அடிப்படையில் பொது ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் தடைசெய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
