பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இலங்கை
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்குள் இன்று இரண்டு அல்லது மூன்று பிரிவுகள் செயற்படுவதாக குறிப்பிட்ட அவர், சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரி இலங்கைக்கு வந்துள்ள நிலையில் அவர் மத்திய வங்கியின் ஆளுநரை சந்திக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் அரசாங்கத்துடன் முரண்பாடு என்ற வகையில் அவர் எதிர்வரும் ஜூலை மாதமளவில் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று ஹர்ச குறிப்பிட்டார். இலங்கைக்கு வந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரி, நேற்று ஜனாதிபதியை சந்தித்தபோது, 2019ஆம் முதல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை விளக்கியுள்ளார் என்று ஹர்ச தெரிவித்தார்.
அதில்-
1- 2020ஆம் ஆண்டு அரசாங்கம் பதவிக்கு வந்ததும் அறிவித்த வரிச்சலுகை காரணமாக அரசாங்கத்துக்கு 500 மில்லியன் ரூபா நட்டமேற்பட்டது,
2-இலங்கைக்கான சர்வதேச நாணய சந்தை மூடப்பட்டுள்ளது.
3-வெளிநாட்டு நாணய ஒதுக்கலில் முறைமை இல்லை, பாதீட்டில் துண்டு விழும் தொகை அதிகம்,
4-நாடு தொடர்பில் நம்பிக்கை அற்றுப்போயுள்ளது.
5- பணவீக்கத்தை கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளமையை நாணய நிதியத்தின் அதிகாரி சுட்டிக்காட்டியதாக ஹர்ச குறிப்பிட்டார்.
தற்போதைய பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கையில் கடந்த வெள்ளக்கிழமை முதல் 1550 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் ஒரு பில்லியன் டொலர்களால் மாத்திரம், பிரச்சினையை தீ்ர்க்கமுடியாது, நாட்டில் தொடர்ந்தும் பொருட்களின் விலை அதிகரிக்கவுள்ளது என்று ஹர்ச தெரிவித்தார்.