விசா நெருக்கடியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள பாதிப்பு
கடந்த மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
விசா பிரச்சினை காரணமாக நிலைமை மோசமாகியுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்தவுடன் விசா பெற வேண்டும்.
சுற்றுலா பயணிகள்
இவ்வாறானதொரு பின்னணியில் குழுவாக வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டிற்கு வருவதற்கு முன்னர் விசாவைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள போதிலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதனை விரும்புவதில்லை என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமை தொடர்பில் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்துடன் கலந்துரையாடிய போதிலும் இதுவரை சரியான தீர்வு கிடைக்கவில்லை என அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 13 லட்சத்து 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
விசா பிரச்சினை
ஓகஸ்ட் மாதம் பொதுவாக பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தரும் மாதமாகும். ஆனால் தற்போதுள்ள விசா பிரச்சினையால் ஒகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 6,500 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
ஆனால் கடந்த மாதம் 18ஆம் திகதிக்கு பின்னர் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5,000 முதல் 3,000 வரை இருந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, பெருந்தொகை அந்நிய செலவணியை வழங்கும் துறையாக சுற்றுலாத்துறை மாறியுள்ளது. இந்நிலையில் சாதகமான வளர்ச்சிப் பாதையில் செல்லும் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டால், அது இலங்கையின் பொருளாதாரத்தை நேரடியாக தாக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.