வடக்கு - கிழக்கு இளைஞர்களின் தேடல்! புலம்பெயர் தமிழர் ஒருவரின் அனுபவப்பகிர்வு (Photos)
இலங்கை தற்பொழுது எதிர்கொண்டுவருகின்ற பொருளாதாரப் பிரச்சினையினால் வடக்கு கிழக்குடன் ஒப்பிடுகின்றபொழுது இலங்கையின் தென்பகுதி மக்களே அதிக அச்சத்திற்கும் தடுமாற்றத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.
அவர்கள் எதிர்கொண்டு வருகின்ற பாதிப்புக்களை விமான நிலையங்கள் முதற்கொண்டு காணக்கூடியதாக இருக்கின்றது. ‘Sir.. you know our salary issues. Please support us if you can' என்று ஒரு சில அதிகாரிகள் சந்தர்ப்பம் வாய்க்கின்றபோது பகிரங்கமாகவே உதவி கேட்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
விமானநிலையத்தின் போட்டர்கள், கழிவறை சுத்தம் செய்பவர்களை கேட்கவே வேண்டாம். றோட்டில் வாகனத்தை மறிக்கும் ரபிக் பொலிஸார், வாகனத்தில் எந்தப் பிழையையும் கண்டுபிடிக்கமுடியாதவிடத்து, '..டீக்கு, காலை உணவுக்கு ஏதாவது உதவிசெய்துவிட்டுப் போங்கள்..' என்று வாகன ஓட்டுனரிடம் பச்சையாகக் கெஞ்சிய இரண்டு சந்தர்ப்பங்களைப் பார்த்தேன்.
தென்னிலங்கையிலுள்ள அலுவலங்களிலும் இதே நிலைதானாம். வினைத்திறன் அற்ற ஒரு சமூகம் அங்கு உருவாகிக்கொண்டிருப்பதாக ஒரு சிங்கள ஊடகவியலாளர் என்னிடம் கூறிக் கவலைப்பட்டார்.
ஓப்பீட்டளவில் இந்த நிலமை வடக்கு கிழக்கில் கொஞ்சம் குறைவு என்றுதான் கூறவேண்டும். எதிர்காலத்தையிட்ட அச்சம், நிச்சயமற்றநிலை போன்றன பற்றிய கவலைகள் சிலரது முகங்களில் தெரிந்தாலும், அதனை எதிர்கொள்ளத் தங்களைத் தாங்களே தயார்படுத்திவிட்ட பலரை அங்கு சந்தித்தேன்.
உதாரணத்திற்கு எனது மனைவியின் சகோதரி சௌமினியைக் கூறலாம். கணவன் ஒரு அரசாங்க உத்தியோகத்தர். சௌமினியும் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். அதேநேரம் இரண்டு பெண்களை வைத்து கைத்தறிப் புடவைகள் தயாரித்து வீட்டில் வைத்து விற்பனை செய்து வருகின்றார். தரமான புடவைகள். வெறும் 10 £ இற்கும் குறைவான விலைதான். ஏராளமான வாடிக்கையாளர்கள்.
அதேபோன்று உயர்கல்விகற்றுள்ள நண்பிகள் இருவர் இணைந்து 'ஆணிவேர் உற்பத்திகள்' என்ற பெயரில் அரோக்கியமான உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் காரியத்தை மேற்கொண்டுவருகின்றார்கள்.
குதிரைவாலி தக்காளி தோசை, கேழ்வரகு தோசை , குரக்கன் புட்டு, வரகு இட்லி, வாழைப்பூ சலட், வல்லாரை தோசை, முள்ளங்கி சலட், வாழைப்பூ சலட், பொன்னாங்கண்ணி சலட், கொள்ளு கஞ்சி.. இப்படி 'ஆணிவேர் உற்பத்திகளின்' மெனுவை பார்க்கின்றபோது, அவர்களது சிந்தனையின் கோணத்தை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.
குபேரன் என்ற இன்னொரு உறவுக்கார இளைஞனைச் சந்தித்தேன். வங்கியில் உத்தியோகம். மனைவி ஆசிரியை. மாலை நேரங்களில் Submarin, Burger, Shawarma, hotdogs விற்பனை செய்யும் ஒரு சிறிய அழகான கடையை மட்டக்களப்பு எல்லை வீதியில் உருவாக்கி உழைக்கின்றார்கள்.
இளைஞர்கள் வரிசையில் நின்று உணவுகளை வாங்குவதைப் பார்க்கும் போது பெருமையான இருந்தது. இலங்கையின் பொருளாதார நிலை காரணமாக வெளிநாடு செல்வது ஒரு வழியென்றாலும், இலங்கையிலேயே அதனை எதிர்கொள்கின்ற பாதைகளையும் சில இளைஞர்கள்- குறிப்பாக வடக்கு கிழக்கு இளைஞர்கள் தேட ஆரம்பித்துவருவது இவர்களையிட்ட பெருமையை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
(புலம்பெயர் தமிழர் ஒருவரின் அனுபவப்பகிர்வு)












