இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் குரங்குகள்! சீனா விடுத்துள்ள கோரிக்கை
இலங்கை குரங்குகளுக்கு (Toque macaque) சீனாவில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது எனவும், சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இலங்கை குரங்குகளை வழங்குமாறு சீன பிரதிநிதிகள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (11.04.2023) இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடலின் போது, இலங்கையில் தற்போது குரங்குகளின் எண்ணிக்கை 3 மில்லியனை எட்டியுள்ளதாகவும், உள்ளூர் பயிர்களுக்கு விலங்குகள் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
சீனாவுக்கு அனுப்பப்படும் 100,000 குரங்குகள்
குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உள்ளூர் அதிகாரிகள் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில் சீனாவினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இது நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையை மீறும் பிரச்சினையை தீர்க்க உதவும் என்று விவசாய அமைச்சகம் தெரவித்துள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக 100,000 குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
திட்டத்திற்கான சட்ட நடைமுறைகளை ஆய்வு செய்ய குழுவொன்றை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட இனங்கள் பட்டியலில் குரங்குகள் இல்லை
கலந்துரையாடலின் போது, பயிர்களை காப்பாற்ற குரங்குகளை (டோக் மக்காக்) கொல்ல விவசாயிகளுக்கு பச்சை விளக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் ரிலாவா என்று அழைக்கப்படும் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர விவசாயிகளிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாதுகாக்கப்பட்ட இனங்கள் பட்டியலில் குரங்குகள் இல்லை என்றும் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் விவசாய அமைச்சர், தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.