நியமன விதிமுறைகளை மீறி அதிபர் நியமனம்: இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டனம்
மன்னார் அரச அதிபர் தனது பதவியை வைத்து செய்ய முயலும் சுயநலத்தேவைகளுக்கு வட மாகாண கல்வியமைச்சும் உடந்தையாக செயற்பட்டதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று (08.05.2023) விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையற்ற அதிபர் நியமனம்
அந்த செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நியமன விதிமுறைகளை மீறியும் குறித்த அதிபர் ஓய்வு பெறுவதற்கு ஐந்து மாதங்களே உள்ள நிலையில், மன்னார் அரச அதிபரின் கணவர் என்பதற்காக மன்னார் மாவட்டத்திலுள்ள பாடசாலையொன்றுக்கு முறையற்ற நியமனமாக வட மாகாண கல்வியமைச்சால் அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக அதிபராக நியமிக்கப்படும் பாடசாலையில், குறித்த அதிபர் மூன்று வருடங்கள் கட்டாயம் சேவையாற்ற வேண்டும் என்று நிபந்தனைகளைப் போடும் வட மாகாண கல்வியமைச்சு, மன்னார் அரச அதிபரின் கணவருக்காக நெறிமுறைகளை மாற்றியமைப்பது பாரிய அநீதியான செயற்பாடாகும்.
இலங்கை ஆசிரியர் சங்கம்
மன்னார் அரச அதிபர், தனது பதவியை வைத்து செய்ய முயலும் சுயநலத்தேவைகளுக்கு வட மாகாண கல்வியமைச்சும் உடந்தையாக செயற்பட்டதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
குறித்த முறையற்ற அதிபர் நியமனம் நிறுத்தப்பட்டு பொருத்தமான முறையில் நியமனம் வழங்கப்படவேண்டும்.
குறித்த நியமனம் சீர்செய்யப்படவில்லையாயின், பாடசாலைகளில் அதிபராக
நியமிக்கப்படும் ஒருவர் மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக அதே பாடசாலையில்
கடமையாற்ற வேண்டும் என வட மாகாண கல்வியமைச்சு விதித்துவரும் நிபந்தனையை இலங்கை
ஆசிரியர் சங்கத்தால் கேள்விக்கு உட்படுத்தப்படும்“ என்றுள்ளது.