ரணில் எடுத்துள்ள நடவடிக்கை! ஜனவரி முதல் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றங்கள்
ஜனவரி முதல் அனைத்து நிதி நிறுவனங்களில் இருந்தும் எமக்கு உதவிகள் கிடைக்க ஆரம்பிக்கும். அதன் மூலம் படிப்படியாக வரிக் குறைப்பு செய்யவும் மின்சாரக் கட்டணங்களில் குறைப்பு செய்யவும் முடியுமாகும். எனவே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் தற்போது செல்லும் வழியைத் தவிர வேறு வழியில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டை மீட்க வந்த ரணில்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஆட்சியாளரக்ளின் பிழையான தீர்மானங்களால் 2002 ஏப்ரல் 12ஆம் திகதி எமது நாடு வங்குரோத்து அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக சர்வதேத்தின் நம்பிக்கையை இழந்தோம். எமக்கு கடன் வழங்க யாரும் முன்வரவில்லை. நாட்டில் தேசிய விழாக்கள் எதுவும் இடம்பெறவில்லை.
இந்த நிலையில் இருந்த நாட்டை மீட்க யாரும் முன்வரவில்லை. சில அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி பெயர் பலகையை மறைத்துக் கொண்டார்கள். அரசியல்வாதிகளுக்கு வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் மே 12ஆம் திகதி பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டு நாட்டை மீட்பதற்கு முன்வந்தார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளும்போது நாட்டில் எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை, அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு. இவற்றைப் பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை. எரிபொருள் பௌசர் வரும்போது கை தட்டி வரவேற்கும் சமூகமே அன்று இருந்தது.
இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க அனைவரதும் ஒத்துழைப்பை அவர் கோரி வந்தார். அதன் பிரகாரமே அவர் ஜூலை 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் 134 வாக்குகளால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
நாடு வங்குரோத்து அடைந்து 18 மாதங்களுக்குள் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு முடியுமாகியுள்ளது.
ஆசியாவில் முன்னணி நாடாகும் இலங்கை
உலகில் வங்குரோத்து அடைந்த நாடுகள் பல இருக்கின்றன. அவை இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் இருக்கின்றன. ஆனால் எமது நாட்டுக்கு குத்தப்பட்டிருந்த வங்குரோத்து என்ற முத்திரையை ரணில் விக்ரமசிங்க ஒரு வருடம் ஆறு மாதங்களில் அகற்ற நடவடிக்கை எடுத்தார்.
இதன் காரணமாக எமது வங்கிக் கடன் அட்டையை ஏற்றுக்கொள்னும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட உலகில் இருக்கின்ற அதிகார பலமிக்க பல தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியே இந்த மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தார்.
அதனால் இதன் பின்னர் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும். நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்ல இடமளிக்கக் கூடாது. அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதிகளை வழங்குவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தை பலப்படுத்தி இருக்கின்றோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என அனைத்து நிதி நிறுவனங்களுககும் வழங்கி இருக்கின்றன. அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டதாலே எமக்கு கடன் வழங்க நாணய நிதியம் முன் வந்திருக்கின்றது.
இதன் மூலம் ஜனவரி முதல் அனைத்து நிதி நிறுவனங்களில் இருந்தும் எமக்கு உதவிகள் கிடைக்க ஆரம்பிக்கும். அதன் மூலம் படிப்படியாக வரிக் குறைப்பு செய்யவும் மின்சாரக் கட்டணங்களில் குறைப்பு செய்யவும் முடியுமாகும். எனவே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் தற்போது செல்லும் வழியைத் தவிர வேறு வழியில்லை. எதிர்வரும் 20 வருடங்களில் இலங்கையை ஆசியாவில் முன்னணி நாடாக கொண்டு செல்வதே எமது இலக்காகும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |