தமிழர் தொடர்பான ரணிலின் நடவடிக்கையில் மறைந்திருக்கும் இரகசியத் திட்டம்! பகிரங்கப்படுத்தப்பட்ட விடயம்
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும், அரசியல் தீர்வினைப் பெற்று தருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திடீரென கூறியிருப்பது சர்வதேசத்தின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான இரகசிய நோக்கமாக கூட இருக்கலாம் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் வெளியிட்ட கருத்தின் உண்மைத் தன்மை என்ன?
75ஆவது சுதந்திர தினத்திற்கு முன் வடக்கின் அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும், எவரும் எமது நாட்டின் மீது கை நீட்டி குற்றம் சுமத்தக்கூடாது எனவும் கடந்த நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தமிழர் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் திடீர் கருத்து எவ்விதத்தில் உண்மைத் தன்மை உடையது என கலாநிதி ரமேஷ் பதிலளிக்கையில்,
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவும், தேசிய இனப்பிரச்சினையோடு தொடர்புடைய காணாமல் போனோருக்கான நீதி, அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பாகவெல்லாம் வெளியிட்ட கருத்துக்கள் இன்று அரசியல் பரப்பில் ஒரு வகையான கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அந்த கூற்று, குறிப்பாக அடுத்த சுதந்திர தினத்திற்கு முன்னர் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற விடயம் எந்த அளவுக்கு நம்பக்கூடியதாக இருக்கும், எந்த அளவுக்கு அதில் உண்மைத் தன்மை ஒன்று இருக்கின்றது என்ற கேள்வியையும் அது தோற்றுவித்திருக்கின்றது.
காரணம், கடந்த காலங்களிலே பல்வேறு சந்தர்ப்பங்களிலே ரணில் விக்ரமசிங்கவினுடைய அரசாங்கம் பதவியில் இருந்திருக்கின்றது.
இப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர்களால் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு முடியாமல் போயுள்ளது.
ஆனால் இன்று தேசியப் பட்டியல் உறுப்பினராக உள்ளே வந்து, மொட்டுக் கட்சியின் செல்வாக்கிலே ஜனாதிபதியாக பதவியேற்று, அந்த குடும்பத்திற்கும் அந்த கட்சிக்கும் ஆதரவாக இருக்கின்ற ஒரு சூழலில், குறிப்பாக அந்தக் கட்சியின் நிலைப்பாடு எங்களுக்கு தெரியும், எந்தவொரு முற்போக்கான செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்காத ஒரு தரப்பினரோடு இருந்து கொண்டு இவர் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை தீர்ப்பது பற்றி பேசியிருப்பது எந்த அளவுக்கு சாத்தியமாகும்.
எந்த அளவுக்கு நடைமுறைக்கு இது பொருத்தமானது என்று கேள்வியையும் ரணிலின் கருத்து எழுப்பியிருக்கின்றது.
சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பை வென்றெடுக்கும் நோக்கம்
அரசியல் கைதிகளைப் பற்றியும், காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றியும் இன்று ரணில் விக்ரமசிங்க பேசிக் கொண்டிருப்பது சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பை வென்றெடுப்பதன் நோக்கமாகக் கூட இருக்கலாம்.
எங்களுக்குத் தெரியும் நாட்டில் தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவிக் கொண்டிருக்கின்றது. மிக இக்கட்டான நிலையில் பதவியேற்றாலும், ரணில் பதவியேற்றதில் இருந்து எந்தவொரு நாடும் பொருளாதார ரீதியான உதவிகளை வழங்க முன்வரவில்லை என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க என்ற ஒரு தனி நபரால் இந்த உதவிகளை எல்லாம் பெற்று நாட்டை மீட்டெடுக்க முடியுமா என்பது நாங்கள் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம்.
இவ்வாறான பின்னணியில், தமிழர்கள் குறித்து ரணில் விக்ரமசிங்க தற்போது முன்வைக்கும் கருத்துக்கள், சர்வதேச சமூகத்தின் பார்வையை திருப்புவதற்கும், சர்வதேச சமூகம் இலங்கை தொடர்பாக கொண்டுள்ள அந்த இறுக்கமான நிலைமையினை தளர்த்துவதற்கு ரணில் விக்ரமசிங்க இப்படியான காரியங்களிலே ஈடுபடுகின்றார் என நான் நினைக்கின்றேன்.
ஏனென்றால் அதன் உண்மைத் தன்மை எந்தளவுக்கு இருக்கும் என்று எங்களுக்கு நம்ப முடியாமல் உள்ளது. தற்போதை நெருக்கடியை தளர்த்துவதற்கு, சர்வதேச சமூகத்தை மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலான கருத்துக்களாகவே நான் இதனைப் பார்க்கின்றேனே தவிர இதில் உண்மைத் தன்மை இருப்பதாக கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார்.