தமிழ் மக்கள் தொடர்பான முக்கிய தீர்வுக்கு உலக நாடுகள் ஆதரவு: சுமந்திரன்
ஜேர்மன், நோர்வே, டென்மார்க் உட்பட சுவீடன், பின்லாந்து உள்ளிட்ட நாடுகளின் முக்கியமான பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுக்களில் தமிழ் மக்களுக்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேற்படி நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை விடயத்தில் ஜேர்மனியின் முக்கியத்துவம்
மேலும் தெரிவிக்கையில்,“அண்மைய பயணத்தில் முதலில் ஜேர்மன் நாட்டுக்கே எனது விஜயம் அமைந்திருந்தது.
ஜேர்மன் நோக்கிச் செல்வதற்கு மூன்று காரணங்கள் பிரதானமாக இருந்ததோடு அந்நாடு இலங்கையின் விடயத்தில் முக்கியத்துவத்துமானதாகவும் உள்ளது.
ஜேர்மனியானது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பிரதான நாடாக உள்ளதோடு, சர்வதேச நாணய நிதியத்திலும் வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றது.
அத்துடன், ஐ.நாவில் இலங்கை பற்றிக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கும் நாடாகவும் உள்ளது.
அந்தவகையில் அந்நாட்டுக்கு நிலைமைகள் பற்றிய தெளிவுபடுத்தல்களையும் அடுத்தகட்டச் செயற்பாடுகள் பற்றிய கோரிக்கைகளையும் முன்வைக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
அங்கு விஜயம் செய்திருந்த நான், ஜேர்மன் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் இயன்ஸ் ஸ்பொட்னருடன் சந்திப்பொன்றை நடத்தினேன். இவர் இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவராகவும் செயற்பட்டவர் என்பது முக்கியமானதாகும்.
நோர்வே நாட்டுக்கான விஜயம்
அதன் தொடர்ச்சியாக நோர்வேக்குச் சென்று, நோர்வேயின் வெளிவிவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் துரே ஹைட்ரமுடன் சந்திப்பை நடத்தினேன்.
போர் நடைபெற்ற காலப்பகுதியில் இவர் இலங்கைக்கான நேர்வேயின் தூதுவராக இருந்தவர். தொடர்ந்து, டென்மார்க், பின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் செய்ததோடு அங்கும் வெளிவிவகாரத் துறையின் பல்வேறு பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடியிருந்தேன்.
ஐ.நா.மனித உரிமைகள் சபை கூட்டம்
இந்த நாடுகளின் பிரதிநிதிகளுடனான உரையாடல்களின்போது, அடுத்து வரும் ஐ.நா.மனித
உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவுள்ள இலங்கையின்
பொறுப்புக்கூறல் பற்றிய பிரேரணை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகவுள்ள அரசியல் தீர்வுக்
கோரிக்கை மற்றும் அதற்கான அவசியம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதோடு, அரசியல்
தீர்வொன்றை வழங்கும் பட்சத்தில் முதலீடுகளைச் செய்வதற்கான ஏதுநிலைகள்
பற்றியும் கரிசனை கொள்ளப்பட்டது" என கூறியுள்ளார்.