இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலங்கை ஆதரவு:ஜனாதிபதி அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினர் உறுப்புரிமைப் பெற முயற்சிக்கும் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலங்கை ஆதரவு அளிக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி விக்ரமசிங்க தற்போது ஜப்பான் சென்றுள்ளார்.
இந்தநிலையில் ஜப்பானிய வெளியுறவு மந்திரி யோஷிமாசா ஹயாஷி உடனான சந்திப்பின் போது, விக்ரமசிங்க, தமது கருத்தை நேற்று(27.09.2022) வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை, தற்போது, ஐந்து நிரந்தர உறுப்பினர்களையும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளையும் கொண்டுள்ளது.
நிரந்தரமற்ற நாடுகள், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் இரண்டு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்தியாவும், ஜப்பானும் நிரந்தரமற்ற நாடுகளின் பகுதிக்குள் அங்கம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில், இந்தியா மற்றும் ஜப்பான்
ஆகிய நாடுகளின் நிரந்தர உறுப்புரிமைக்கான முயற்சிக்கு தமது அரசாங்கம்
ஆதரவளிக்கும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஆதரவு
சர்வதேச அரங்கில் ஜப்பான், இலங்கைக்கு வழங்கிய ஆதரவை ரணில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில்,நிரந்தர உறுப்பினர்களாவதற்கான ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் பிரசாரத்திற்கு ஆதரவளிக்க தமது அரசாங்கத்தின் விருப்பத்தை வெளிப்படுத்தினார் என்று ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யா, பிரித்தானியா,சீனா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா மற்றும் இந்த நாடுகள் எந்தவொரு உறுதியான தீர்மானத்தையும் வீட்டோ செய்யலாம்.
இந்தியாவின் வலியுறுத்து
இதேவேளை சமகால உலக யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தரமற்ற உறுப்பினரான இந்தியா, தனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தின் இரண்டாம் ஆண்டில் இறுதி பாதியை கடக்கிறது.
இதற்கிடையில் கடந்த சனிக்கிழமையன்று, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77 வது அமர்வின் பொது விவாதத்தில்
உரையாற்றுகையில், இந்தியா பெரிய பொறுப்புகளை ஏற்கத் தயாராக உள்ளது என்று
வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.