இலங்கையின் பாதுகாப்பு குறித்து வெளிநாட்டவர்கள் வெளியிட்ட தகவல்
இலங்கையில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து நாடாளவிய ரீதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
“நான் கலிபோர்னியாவில் இருந்து வந்தேன். நான் இங்கு எந்த ஆபத்தையும் உணரவில்லை. நான் எந்த அசௌகரியத்தையும் உணரவில்லை” என அமெரிக்கர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு
இலங்கை முழுமையான பாதுகாப்பான நாடு. அவுஸ்திரேலியாவை விட பாதுகாப்பானது. நான் இலங்கையை நேசிக்கிறேன். இது ஒரு அற்புதமான நாடு. நாடு பாதுகாப்பாக உள்ளது” என அவுஸ்திரேலிய நாட்டு பெண் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மிகவும் பாதுகாப்பானது, இலங்கை ஒரு சிறந்த நாடு. எந்தவொரு வெளிநாட்டு சுற்றுலா பயணியும் அச்சமடைய தேவையில்லை என மேலும் பல சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.
அறுகம்பே கடற்கரை மற்றும் அப்பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தளங்கள்
இதேவேளை, வெளிநாட்டவர்கள் அதிகம் கூடும் எல்ல, வெலிகம, உனவட்டுன போன்ற சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் சுற்றுலா பயணிகள் அதிக கூடும் இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா முதலில் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து பல நாடுகள் தமது பயணிகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.