ஈழத்தின் திருச்செந்தூர் எனப்போற்றப்படும் கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம்
ஈழத்தின் திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு - கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றதுடன் ஆரம்பமாகியுள்ளது.
ஆலயத்தின் மஹோற்சவ நிகழ்வுகள் நேற்று (04.09.2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
திருச்செந்தூர்முருகன் ஆலயம்
இலங்கைத் திருநாட்டில் ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயங்களில் தமிழ் மொழியில் வேத பாராயணங்கள் ஓதப்பட்டு முருகப்பெருமானிற்கு பூசை வழிபாடுகள் இடம்பெறும் ஒரேயொரு ஆலயமாக மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயம் விளங்குகின்றது.
மிகவும் பழமையான இந்த ஆலயமானது மகாதுறவி ஓங்காரானந்தா சரஸ்வதி சுவாமிகளினால் உருவாக்கப்பட்டு ஒரு சித்தர் பீடமாக அருள்பாலித்து வருகின்றது.
கொடியேற்ற நிகழ்வு
நேற்று காலை விசேட யாகம் நடைபெற்று முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து மூலமூர்த்திக்கு அருகில் கொடிச்சீலை வைக்கப்பட்டு கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்று கொடிச்சீலை கொடித்தம்பத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்போது கொடித்தம்பத்திற்கு அருகில் விசேட பூஜைகள் நடைபெற்று தமிழில் கொடியேற்ற பாடல் பாடப்பட்டு கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த கொடியேற்றத்தின்போது சாதாரண பொதுமக்களும் இணைந்து இந்த கொடியேற்றத்தினை மேற்கொள்வது சிறப்பம்சமாக கருதப்படுகின்றது.
பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் உற்சவத்தில் தினமும் விசேட பூஜைகள் நடைபெறவுள்ளதுடன் சுவாமி வீதியுலாவும் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி ஆலயத்தின் சிறப்புமிகு தேரோட்டம் நடைபெறவுள்ளதுடன் 13ஆம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |