இலங்கையின் சிரேஷ்ட புற்றுநோய் சிகிச்சை நிபுணர் பதவி விலகல்
காலி - கராப்பிட்டிய வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் கிரிஷாந்த பெரேரா பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவரைத் தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தனக்கு அநீதி நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்து, அவர் பணியில் இருந்து ஓய்வுபெறுவதற்கான கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
பதவி ஓய்வுக்கான அறிவித்தல்
கடந்த 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற சுகாதாரப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சிற்றூழியர்கள் 300 பேர் தன்னைக் கேவலமாக தூற்றியதுடன், தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் வைத்தியர் கிரிஷாந்த பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ,பொலிஸார் மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் பக்கச்சார்பாக நடந்து கொண்டுள்ளதாகவும் பதவி ஓய்வுக்கான அறிவித்தல் கடிதம் மூலம் வைத்தியர் கிரிஷாந்த பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் நடைபெற்ற சம்பவங்கள் காரணமாக தான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்து, அவர் தனது வைத்தியர் பதவியில் இருந்து பதவி விலகியுள்ளார்.
எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி தொடக்கம் பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ள அவர், நேற்றைய தினம் (18) ஆம் திகதி தொடக்கம் பதவி ஓய்வுக்கு முந்திய விடுமுறைக்காக விண்ணப்பித்துள்ளார்.
இலங்கையின் புற்றுநோய்க்கான விசேட சிகிச்சை மருத்துவர்கள் மத்தியில் வைத்தியர் கிரிஷாந்த பெரேரா நீண்ட அனுபவம் கொண்ட ஒரு மூத்த மருத்துவர் ஆவார். 61 வயது கடந்த நிலையிலும் அவர் பணியில் இருந்து ஓய்வுபெறாது நோயாளிகளின் நலன் கருதி சேவையில் ஈடுபட்டிருந்தார்.
எனினும் சிற்றூழியர் விவகாரத்தில் தான் அநியாயமாக தண்டிக்கப்பட்டிருப்பதாக மன உளைச்சலுடன் அவர் தற்போது அரச சேவையில் இருந்து பணி ஓய்வுபெற விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில் வைத்தியர் கிரிஷாந்த பெரேராவை அச்சுறுத்திய சிற்றூழியர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தி, இன்று (19) காலை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள், நோயாளிகளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

