துருக்கியில் IS அமைப்பைச் சேர்ந்த 115 சந்தேக நபர்கள் கைது
துருக்கியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கருதப்படும் IS அமைப்பைச் சேர்ந்த 115 சந்தேக நபர்களைத் துருக்கியப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
இஸ்தான்புல் முழுவதும் 124 இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ஏராளமான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வைக்கப்படும் இலக்கு
இந்த வாரம் துருக்கி முழுவதும், குறிப்பாக முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்த இந்த அமைப்பினர் திட்டமிட்டிருந்ததாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகழ் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் துருக்கிக்கு வெளியே உள்ள ஐஎஸ் (IS) அமைப்பின் செயல்பாட்டாளர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் 22 பேரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் துருக்கிய உளவுத்துறை நடத்திய சோதனையில், உயர்மட்ட ஐஎஸ் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிரியா மற்றும் ஈராக் எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் ஐஎஸ் அமைப்பின் நடமாட்டம் இன்னும் நீடிப்பதால், துருக்கி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.