கச்சத்தீவின் இராஜதந்திர பின்னணி: இந்தியா பெற்றுக்கொண்ட கனிமவள தீவு
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்து, கனிமவளம் மிக்க வொட்ஜ் பேங்க் தீவை பெற்றமை, இராஜதந்திரம் என்று தமிழக காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளமை தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், குறித்த கருத்துக்கு எதிராக பாரதீய ஜனதாக்கட்சியின், தமிழகத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கியிருந்த செல்வப்பெருந்தகை, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததை நியாயப்படுத்தி பேசியிருந்தார். அது, மறைந்த இந்திரா காந்தியின் இராஜதந்திரம் என்று கூறியிருந்தார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
இந்தநிலையில், கடந்த 30 ஆண்டுகளில், இலங்கை அரசால், பல்லாயிரக்கணக்கான இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை இராஜதந்திரமா என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
பலநூறு இந்திய கடற்றொழிலாளர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனரே. அதுவும் இராஜதந்திரம் தானா என்று அவர் வினவியுள்ளார்.
மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதால், பலர் வாழ்வாதாரத்தை இழந்தார்களே இதுவும் இராஜதந்திரத்திலா அடங்கும் என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தபோது, அன்று தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம், அதற்கு சம்மதம் தெரிவித்துத் தமிழக கடல்சார் மக்களுக்குத் துரோகம் செய்துள்ளது.
கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு
அத்துடன், கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.
அப்போதெல்லாம் இந்த இராஜதந்திரத்தைப் பற்றி திராவிட முன்னேற்றக் கழக- காங்கிரஸ் கூட்டணி பேசியதில்லையே என்றும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை,தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை சொல்வது போலக் கச்சத்தீவைத் தாரைவார்த்தது இராஜதந்திரம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புக் கொள்வாரா என்றும் அண்ணாமலை வினவியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |