இலங்கைப் பொருளாதாரம் மீட்சி பெறும்! நம்பிக்கை வெளியிட்ட நேபாள கோடீஸ்வரர்
இலங்கையின் பொருளாதாரம் மிக வலுவான முறையில் மீட்சி பெறும் என்று உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள நேபாளக் கோடீஸ்வரர் பினோத் சௌத்ரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த வாரம் இலங்கை பணிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு தலைமைத்துவக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விருந்தோம்பல், வங்கி, தொலைத்தொடர்பு, எரிசக்தி மற்றும் உற்பத்தித் துறைகளில் இயங்கும் தனது சிஜி கார்ப் குளோபல் (CG Corp Global)நிறுவனத்தின் தலைவரும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றவருமான இந்த தொழிலதிபர், இலங்கையின் நீண்டகால ஆற்றல் குறித்து இதுவரை இல்லாத மிக வலுவான அங்கீகாரங்களில் ஒன்றை வழங்கியுள்ளார்.
பொருளாதார மேம்பாடு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல ஆண்டுகளாக நிலவிய அரசியல் மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இலங்கை நாட்டின் பொருளாதார மீட்சி மீது மீண்டும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். எனது தெற்காசிய முதலீட்டு உத்தியின் மையத்தில் இலங்கையை ஒரு முக்கிய கேந்திர மையமாக கருதுகின்றேன்.

இலங்கை நான் மிகவும் போற்றும் ஒரு நாடு, அதன் தொழில்முனைவுக் கலாச்சாரம், மீள்திறன் மற்றும் மூலோபாய நன்மைகளைப் பாராட்டுக்குரியவை. நான் நேபாளத்திற்கு வெளியே வாழ நேர்ந்தால், இலங்கையே எனது விருப்பமான இடமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.