இரண்டாயிரம் கோடிக்கும் மேல் நட்டத்தை சந்தித்துள்ள இலங்கையின் சர்வதேச விமான நிலையம்
2022 ஆம் ஆண்டு மத்தள சர்வதேச விமான நிலையத்தின் இழப்பீடு 2,221 கோடி ரூபா என கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இது அதன் வருமானத்தில் இருபத்து ஆறு மடங்கு எனவும் விமான நிலையம் செயல்படத் தொடங்கிய 2017ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை அதன் மொத்த இழப்பீடு 4281 கோடி ரூபா எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தணிக்கை அறிக்கைகளின் படி இந்த விமான நிலையத்தின் இழப்பீடு 2021ஆம் ஆண்டில் 444 கோடியாக காணப்பட்ட நிலையில் இது 2022ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகமாகும்.
அதன்படி கடந்த வருடம் மத்தள, இரத்மலானை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையங்களுக்கு ஏற்பட்ட இழப்பு 2345 கோடி ரூபாவுக்கும் அதிகம் என கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.
2021ஆம் ஆண்டில் 261கோடி ரூபா செலுத்தப்பட்டுள்ளது
மட்டக்களப்பு விமான நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் எந்தவொரு வருமானமும் கிடைக்கப்பெறவில்லை எனினும் அதற்கான செலவு 8.7 கோடி ரூபாவாகும்.
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் வருடாந்த பயணிகளின் உண்ணிக்கை பத்து இலட்சம் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கடந்த வருடம் இந்த விமான நிலையத்தின் ஊடாக சென்ற பயணிகளின் எண்ணிக்கை 11,577 ஆக இருந்ததுடன் கடந்த ஐந்து வருடங்களில் 103,324 பயணிகளே சென்றுள்ளனர்.
இதேவேளை, மத்தள விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக 3,656 கோடி ரூபா வெளிநாட்டு கடன் உதவிக்காக செலவிடப்பட்டுள்ளது.
அந்த கடன் தொகைக்காக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் 2022ஆம் ஆண்டு 184 கோடி ரூபா கடன் தவணை செலுத்தியுள்ளதுடன் 2021ஆம் ஆண்டில் 261கோடி ரூபா செலுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.