கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து! ஒரே வாரத்தில் சீர்குலைந்த குடும்பம்
உயிர் பிரிந்து, உயிர் பிறத்தல் என்பது உலக நியதி.. வருடாவருடம் சிலர் பிறக்க பலர் இறத்தல் என்பதும், பலர் இறக்க சிலர் பிறத்தல் என்பதுமாக மாறி மாறி இந்த இயற்கைச் சுற்றுவட்டம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
அண்மைக்காலங்களாக, இறப்புக்கள் என்பது கோரமாக மாறிக் கொண்டிருக்கின்றது.
யுத்தம், இயற்கை சீற்றம், இயற்கை மரணம் என்பதைத் தாண்டி, வஞ்சம், பொறுப்பின்மை, பழிதீர்த்தல், கவனயீனம் போன்ற பிரயோசனமற்ற காரணங்களால் பறிபோகும் உயிர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக, உலக நாடுகளைத் தவிர்த்து இலங்கையை பார்க்கும் போது, குற்றச் செயல்களால், விபத்துக்களால், பழி உணர்ச்சிகளால், அற்ப ஆசைகளால் பறிபோகும் உயிர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து செல்கின்றன.
கடந்த காலங்களில், இலங்கையை உலுக்கிய கொடூர கொலைகள், பரிதாப மரணங்களை ஏற்படுத்திய கொடூர விபத்துக்கள் பல நிகழ்ந்துள்ளன.
இவை அனைத்திற்கு பிறகும் ஏதோ ஒரு குடும்பம், யாரோ ஒருவருடைய வாழப்பட வேண்டிய வாழ்க்கை சீர்குலைந்து போகின்றது. இயற்கையாக நடப்பதைத் தாண்டி, மனிதம் மறந்த சில மனிதர்களால் பறிக்கப்படும் இவ்வகை உயிர்களையும், வாழ்க்கையையும் யார் திருப்பிக் கொடுப்பது..
கடந்த மாதம் 25ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகைத் தினத்தன்று கிளிநொச்சியில் ஒரு கோர விபத்து இடம்பெற்றது. தனது 2 மற்றும் 6 வயதுகளையுடைய பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெற்றோர் விபத்துக்கு இலக்காகினர்.
டிப்பர் வாகனமொன்று அந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதில் இந்த கோர விபத்து இடம்பெற்றது. சம்பவம் இடம்பெற்ற அன்றையதினமே, 2 வயதுக் குழந்தை பரிதாப மரணத்தைத் தழுவியது.
விபத்துக்கு இலக்கான தந்தை, தாயார் மற்றும் 6 வயது மகள் ஆகியோர் பலத்த காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனாலும், விபத்தின் கோரம் சிகிச்சைப் பெற்று வந்த தாயையும் இன்று(02) காவு கொண்டுள்ளது.
குடும்பத்தின் பேரிழப்பு
ஏற்கனவே, 2 வயது பிள்ளையை பறிகொடுத்து, இன்று தாயையும் பறிகொடுத்திருக்கும் அந்தக் குடும்பத்தின் பேரிழப்புக்கு ஒரு டிப்பர் வாகனத்தின் சாரதியின் கவனயீனமே காரணம்.
சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு முன்தினம் அனைவரும் குடும்பமாக சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக அந்த பொழுதைக் கழித்து விட்டு வந்துள்ளனர். அதேபோலத்தான் அன்றைய கிறிஸ்மஸ் பொழுதும் அவர்களுக்கு விடிந்தது. ஆனால், அன்று மாலையே அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோசத்தையும் அந்த விபத்து பறித்துச் சென்றுள்ளது.
தனது இரு பிள்ளைகளையும், எப்படி வளர்க்க வேண்டும், எப்படி ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்க வேண்டும் என்று எத்தனை எத்தனை கனவுகளை அந்த பெற்றோர் சுமந்திருப்பர். இன்று தந்தையும், ஒரே ஒரு மகளுமாய் தனித்து விடப்பட்டுள்ள அவர்களின் துயர மன நிலைக்கும், கேள்விக்குறியாகும் இனி வரும் நாட்களுக்கும் விதியை எப்படி காரணம் காட்டுவது..
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்ற மக்கள் குறிப்பிட்டிருந்தனர். வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு என்று பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், பலர் பின்பற்றுகின்ற போதிலும், இவ்வாறான ஒரு சிலரின் பொறுப்பற்றத் தன்மையினால் விலை மதிக்க முடியாத பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன என்பதை எங்கணம் ஏற்பது.
மதுபாவனை, தொலைபேசி பாவனை, தூக்கமின்மை, கவனயீனம் உள்ளிட்ட காரணங்களே பெரும்பாலும் விபத்துக்களுக்கு காரணமாகின்றன. இவற்றை தவிர்ப்பதால் சாரதிகளுக்கு எவ்வித நட்டமும் ஏற்படப் போவதில்லை, ஆனாலும் பலரால் இவை பின்பற்றப்படுவதுமில்லை.
இது போன்ற பெறுமதியற்ற காரணங்களால் ஏன், எதற்கு என்றே தெரியாமல் பறிபோகும் உயிர்களுக்கு சமாதானம் சொல்வோர் இங்கு யார்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 02 January, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.