இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்து வேண்டும்! கனேடிய தமிழர்கள் வாகனப் பேரணி
யுத்தக் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரியப்பட்டுள்ள இனப்படுகொலை ஆகியவற்றிற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ) பாரப்படுத்துமாறு கனடாவை வலியுறுத்துவதற்காக கனேடிய தமிழ் சிவில் சமூக உறுப்பினர்கள் ரொறன்ரோவிலிருந்தும், மொன்றியலிலிருந்தும், ஒட்டாவாவிலுள்ள பாராளுமன்ற வளாகம் வரையிலான வாகனப் பேரணி ஒன்றினை 17ம் திகதி புதன்கிழமையன்று ஏற்பாடு செய்துள்ளார்கள்.
இலங்கைக்கான இணை - அனுசரணை நாடுகளின் ஓர் உறுப்பு நாடு என்ற வகையில் எதிர்வரவிருக்கின்ற ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்விற்கான தீர்மானத்தை வரைவதில் கனடா தற்பொழுது ஈடுபட்டுள்ளது.
அண்மையில், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் அவர்கள் 2021ம் ஆண்டு தை மாதம் 27ம் தகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ள நிலவரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ) பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் (ஓஎச்சீஎச்ஆர்) வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலுமுள்ள தமிழர்கள் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ) பாரப்படுத்துமாறு ஒருமித்து அழைப்பு விடுத்துள்ளனர்.