ஜனாதிபதியும் பிரதமரும் எமது ஆதரவாளர்கள்! போராட்டக்காரர்களால் எதுவும் செய்ய முடியாது:ஜோன்ஸ்டன் எச்சரிக்கை
"அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் தாமாகவே அடங்க வேண்டும். இல்லையேல் அவர்களை அரசு அடக்கியே தீரும்."என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அமைதி காக்க நாங்கள் தயார் இல்லை

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,"ராஜபக்சர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினரும் வீழ்ந்து விட்டார்கள் என்று போராட்டக்காரர்கள் தப்புக்கணக்கு போடக்கூடாது.
நாங்கள் அமைதியாகவே ஒதுங்கி நின்றோம். தொடர்ந்து அமைதி காக்க நாங்கள் தயார் இல்லை. எம்மைச் சீண்டுவோருக்குத் தக்க பதிலடி கொடுக்க நாங்கள் தயார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சிதான் இன்னமும் தொடர்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எமது பக்கமே வந்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் எமது கூட்டணியைச் சேர்ந்தவரே.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சிதான் தொடரும்

அரசுக்கு எதிராகப் போராடுவோர் உண்மையான போராட்டக்காரர்கள் அல்லர். அவர்கள் கொடிய வன்முறையாளர்கள்.
அவர்கள் கடந்த மே 9 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர்களின் வீடுகளை எரித்து தங்கள் காடைத்தனத்தை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.
கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் மறைமுக ஆதரவுடனும், வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களின் பண உதவியுடனும் தான் அரசுக்கு எதிராக அவர்கள் போராடுகின்றனர்.
இந்தப் போராட்டக்காரர்கள் தாமாகவே அடங்க வேண்டும். இல்லையேல் அவர்களை அரசு அடக்கியே தீரும்"என கூறியுள்ளார்.