கோட்டாபயவின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட இலட்சக்கணக்கான பணம் தொடர்பில் வெளியான தகவல்
ஜனாதிபதி மாளிகையில் உள்ள இரகசிய அறையொன்றின் அலுமாரியில் இருந்து இந்த பணத் தொகை மீட்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகைக்குள் நேற்று பிரவேசித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று இந்தப் பணத்தைக் கண்டெடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரியிடம் கையளிக்கப்பட்ட பணம்
கிடைத்த பணத்தை அவர்கள் எண்ணி ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரி ஒருவரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.
காணொளியில் கருத்து தெரிவித்துள்ள பலரும், கிடைத்த பணத்தை முறையாக கணக்கிட்டு உரிய பொறுப்பு வாய்ந்த துறைகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் தெரிவித்தபோது, ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இவ்வாறு பணம் பெறப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியிருந்தும், பணத்தின் அளவு மற்றும் எந்த நோக்கத்திற்காக பணம் அங்கு வைக்கப்பட்டது என்பது குறித்த சரியான தகவல்களை ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.