தேர்தல் களத்தில் தமிழ் மக்களின் வாக்கை பெற்றுக்கொள்வதற்காக ரணில் - சஜித் மோதல்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலொன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களத்தில் இறங்கியுள்ள பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தங்களது பிரசார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான பிரதான வேட்பாளர்களின் வியூகங்கள் மற்றும் வாக்குறுதிகள் தொடர்பான செய்திகளை பரவலாக காண முடிகின்றது.
அந்த வகையில், தேர்தலில் களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக எவ்வாறான நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது தொடர்பில் கீழ் வரும் பதிவு விரிவாக ஆராய்கின்றது..
வடக்குத் தமிழ் மக்களின் வாக்கு
வடக்கில் உள்ள சிறுபான்மை தமிழர்களின் வாக்கு இம்முறை தெற்கில் ஜனாதிபதி வேட்பாளர்களின் வெற்றி அல்லது தோல்விக்கு ஒரு தீர்க்கமான காரணியாகும். வடக்கில் தமிழ் மக்களுக்காகத் தனி வேட்பாளரை முன்வைக்கப் போவதாகக் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட பின்னர் ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் வடக்கில் தமிழ் வாக்குகள்மீதான நம்பிக்கையைக் கைவிடுவதற்கு பதிலாக மேலும் மேலும் வடக்கு தமிழ் மக்களின் வாக்கின் மீது கரிசனை செலுத்த தொடங்கியுள்ளனர்.
இவர்கள் இருவரும் அண்மையில் வடக்கில் தமிழ் வேட்பாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளைப் போட்டிக்குப் போட்டி என்பது போல் சந்திப்புக்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இதன்படி, வடக்கில் தமிழ் வேட்பாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆகஸ்ட் 12ஆம் திகதியும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மறுநாள், அதாவது ஆகஸ்ட் 13ஆம் திகதியும் சந்தித்திருந்தனர். அந்தச் சந்திப்புகளில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பில் தமிழ்ப் பத்திரிகைகள் விரிவான செய்திகளை வெளியிட்டிருந்தன.
ஆனால் அதற்கு முந்தைய நாட்களில் தென்னிலங்கை சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில் குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு தொடர்பில் எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியது ஆகஸ்ட் 15ஆம் திகதி தினமின மற்றும் திவயின நாளிதழ்களில் செய்தியாக வெளியாகியிருந்தது.
இப்போது தென்னிலங்கைத் தலைவர்கள் முகம்கொடுக்கும் பிரதான சவால் தென்னிலங்கையில் சிங்கள பௌத்த வாக்குகளுக்குச் சேதம் விளைவிக்காமல் தமிழ் வாக்குகளை எவ்வாறு பெருக்குவது என்பதாகும். ரணில் விக்ரமசிங்கவும், தமிழர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஜனநாயக போராளிக் கட்சிகளின் தலைவர்களும் சந்தித்ததாக ஆகஸ்ட் 13ஆம் திகதி காலைக்கதிர் பத்திரிகை முதற்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, பலமான நாடாளுமன்ற அதிகாரம் இருந்தால்தான் சமஷ்டி பற்றிப் பேச முடியும், அதுவரை மாகாண சபைபற்றி மட்டுமே பேச முடியும் என ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார். அன்றைய தினம் ஈழநாடு நாளிதழின் முதல் பக்கத்தில் தமிழ் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் "சமஷ்டி அதிகாரத்தை நான் வழங்க முடியாது.
பலம்மிக்க நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அதுகுறித்து பரீசலனை செய்ய முடியும்” என்பதாக. அத்துடன், சமஷ்டி வழங்கப்படும் வரை 13வது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாகப் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13 அன்று, காலைமுரசு நாளிதழின் முதல் பக்கத்தில், சந்திப்புபற்றிய விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
தமிழ் நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு மேலதிகமாக, தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்கும், தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள நடவடிக்கைகள்குறித்து அறிந்து கொள்வதற்கும் தமிழ் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்கும் முறையான சமஷ்டி தீர்வு முறைமை இல்லாத காரணத்தினால் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை முன்வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர் என்பதும் அக்கட்டுரையில் எழுப்பப்பட்ட மற்றுமொரு விடயமாகும்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஏனைய தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்ட விடயங்களுக்கு மேலதிகமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாகக் கூறப்படும் பல விடயங்களும் காலைமுரசு பத்திரிகையில் வெளியாகின. அதாவது, அந்த அறிக்கையின்படி தமிழ் மக்கள் சார்ப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, எஞ்சியுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு மற்றும் அபகரிப்பதை தடுப்பது, தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் நீதியற்ற முறையில் கைது செய்யப்படுவதைத் தடுப்பது, விசாரணை என்ற போர்வையில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கையை நிறுத்துதல், இந்திய மீனவர்களின் அத்துமீறலினால் எமது மீனவர்கள் படும் துன்பங்கள் உட்பட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காலைமுரசு நாளிதழில் வெளியான இந்தச் செய்தியை ஒத்ததாக ஒரு கட்டுரை ஆகஸ்ட் 14ஆம் திகதி தினகரன் நாளிதழின் நான்காவது பக்கத்திலும் வெளியானது. சமஷ்டி முறைமை மற்றும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடக்குப் பிரதிநிதிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தெற்கின் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில் அறிக்கையிடப்படவில்லை.
ஆகஸ்ட் 14ம் தேதி ஈழநாடு நாளிதழின் முதல் பக்கத்தில் குறித்த சந்திப்பு விவரம் வெளியானது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
தமிழ் வேட்பாளரை முன்வைப்பது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் எனவும் அவர் கூறியிருந்தார். அன்றைய தினம் காலைக்கதிர் நாளிதழின் முதல் பக்கத்தில் விரிவான செய்தி வெளியானது. இதன்படி, தான் ஜனாதிபதியானால் மாகாண சபைக்கான அதிகாரப் பகிர்வை உடனடியாக நடைமுறைப்படுத்துவேன் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விசேட செயலணியொன்று அமைக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
மற்றும் அவரது நேரடி மேற்பார்வையில் தீர்வுகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அதே நாளில் தினகரன் நாளிதழின் 4வது பக்கத்தில், காலைக்கதிர் நாளிதழின் செய்தி அறிக்கை போன்ற செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 14ஆம் திகதி தமிழ் மிரர் நாளிதழின் முதல் பக்கத்தில், “13 க்கு அஞ்சேன்:தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் தெரிவித்தார்" என்ற தலைப்பில் சிறு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சஜித் பிரேமதாச மற்றும் தமிழ்ப் பிரதிநிதிகளின் சந்திப்பு தொடர்பில் ஆகஸ்ட் 14ஆம் திகதி திவயின, தினமின இரு சிங்களப் பத்திரிகைகள் மாத்திரமே செய்தி வெளியிட்டிருந்தன.
இரண்டு செய்தித்தாள்களின் உள்ளடக்கமும் அநேகமாக ஒத்ததாக இருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவித்ததை மேற்கோள் காட்டி இரண்டு பத்திரிகைகளும் இந்தச் சம்பவத்தைச் செய்தி வெளியிட்டிருந்தன.
திவயின பத்திரிகையின் முதற்பக்கத்தில் 'அரசியலமைப்பை சேதப்படுத்தாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகச் சஜித் உறுதியளித்தார்' என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் இடம் பெற்றுள்ள அடைக்கலநாதன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண மாகாண சபைகளுக்கு 'அதிக அதிகாரங்கள்' வழங்கப்படும் எனச் சஜித் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் மாகாண சபைகளுக்கு 'அதிக அதிகாரங்களை' வழங்குவேன் எனச் சஜித் பிரேமதாச கூறியதாகப் பா.உ அடைக்கலநாதன் குறிப்பிட்டதை மேற்கோள்காட்டி தினமின பக்கம் 8ல் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் அறிக்கையிடப்பட்டுள்ளது. ஆனால் இங்கு முக்கியமான விடயம் என்னவெனில், தமிழ் பத்திரிகைகள் மாகாண சபைக்கு “அதிகாரப் பகிர்வு” என்ற அர்த்தத்தை உணர்த்தும் வகையில் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் சிங்களப் பத்திரிகைகள் “அதிக அதிகாரங்கள்” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தன.
13வது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படும்/ அரசியலமைப்புக்கு பாதிப்பின்றி தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும், மாகாண சபையின் அதிகாரம் பகிரப்படும்/ மாகாண சபைக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படும்... போன்ற வாக்குறுதிகள் வெறும் வார்த்தை மாற்றங்களா? அல்லது தமிழ் மக்களைத் திருப்தி படுத்தும் வார்த்தை மாற்றங்களா? அல்லது உண்மையான வாக்குறுதிகளா? என்பது தொடர்பில் வடக்கிலும் தெற்கிலும் ஜனாதிபதி வேட்பாளர் சண்டையின் சூடு பற்றி, பத்திரிகைகளின் பக்கங்களிலிருந்து வெளிவரும் செய்திகளின் விதத்தின் படி, நாம் இது தொடர்பாக மேலதிக விடயங்களை எதிர்காலத்தில் புரிந்து கொள்ள முடியும்.
மலையகத் தமிழர்கள்
ஆகஸ்ட் 12 ஆம் திகதி நிலவரத்திற்கு, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ஆரம்பத்தில் 1350 ரூபாவும் பறிக்கப்படும் கொழுந்துகளின் அளவைப் பொறுத்து மேலும் 350 ரூபாவும் வழங்குவதற்காகச் சம்பள நிர்ணயச் சபை அங்கீகரித்துள்ளது. ஆகஸ்ட் 13ஆம் திகதியன்று சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களின் முதல் பக்கத்தில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் அரசாங்கப் பத்திரிகைகளான தினமின, டெய்லி நியூஸ், தினகரனிலும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினருக்கு தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் செய்திகள் வெளியாகியிருந்தன.
மேலும், ஆகஸ்ட் 14 ஆம் திகதி திவயின, அருண மற்றும் மவ்பிம பத்திரிகைகளைப் போலவே, ஈழநாடு நாளிதழும் சம்பள உயர்வுகுறித்து எதிர்ப்புகளுடன் கூடிய மாற்றுக்கருத்துக்களை கொண்ட செய்திகளை பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் சம்பள அதிகரிப்பு தொடர்பாக முன்வைக்கும் மாற்றுக்கருத்து அடங்கிய செய்தி ஈழநாடு நாளிதழின் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சம்பளப் பிரச்சினையில் பாரிய காட்டிக்கொடுப்பு செயல் இடம்பெற்றுள்ளதாகவும் அது தோட்ட மக்களுக்குச் செய்யும் துரோகமாகக் கருதப்படுவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவயின, அருண, மவ்பிம ஆகிய பத்திரிகைகளின் ஏழாவது, இரண்டாவது மற்றும் ஐந்தாவது பக்கங்களில், சம்பள உயர்வை விமர்சித்து நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வீ.ராதா கிருஷ்ணன் வெளியிட்ட செய்தி காணப்படுகின்றது.
வி.ராதா கிருஷ்ணன் கூறுகையில், சம்பள நிர்ணய சபை ஒப்புதல் அளித்தாலும், சம்பள உயர்வு நடைபெறும் வரை நிச்சயமற்ற நிலையே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) தொகை வழங்குவது தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1350 என்ற அடிப்படையில் ஆகும். மேலும் தோட்டங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஊதியத்தை உயர்த்த அனுமதி இல்லை மற்றும் மூன்று ஆண்டுகளுக்குத் தொழிற்சங்கங்கள் அத்தகைய கோரிக்கைகளை வைக்க முடியாது என்று தோட்ட நிறுவனங்கள் நிபந்தனைகளை விதித்துள்ளன என்றும் கூறியிருந்தார்.
அருண நாளிதழிலும் இரண்டாவது பக்கத்தில் இது தொடர்பாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிகைகள் தோட்டங்களில் சம்பள அதிகரிப்பு சம்பவத்தை வெறும் செய்தியாகவோ அல்லது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் செய்திகளாகவோ வெளியிட்டாலும், அரசாங்கப் பத்திரிகைகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாகக் குறிப்பாகத் தேர்தலின்போது அதனை முன்னிலைப்படுத்த முயற்சித்ததை காணக்கூடியதாக இருந்தது.
பெருந்தோட்ட சம்பள உயர்வு தொடர்பில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அணியினர் ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்துக்கொள்ளும் செய்திகள் பெரும்பாலும் அரசாங்கப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்த நிலையில், ஆகஸ்ட் 13ஆம் திகதி தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சிலோன் டுடே பத்திரிகையில் சம்பள உயர்வுபற்றிய செய்தி முதல் பக்கத்தில் ஒரு சிறிய அறிக்கையாகக் கூட வெளியாகவில்லை.
ஆனால் அன்றைய குறித்த பத்திரிகையின் முதல் பக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் பல தோட்டக் கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்குறித்த செய்தி புகைப்படங்களுடன் வெளியாகியிருந்தது. அன்றைய தினம் டெய்லி மிரர் நாளிதழின் 4ஆம் பக்கத்தில், திவயின 8ஆம் பக்கம், தி ஐலண்ட் பக்கம் 1 மற்றும் 2இல் புகைப்படங்களுடன் அதே செய்தி பதிவாகியுள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், ஐக்கிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் ஆகியோர் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் சார்பாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின.
மேலும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஏழு அத்தியாயங்கள் மற்றும் 48 சரத்துக்களைக் கொண்ட ஆவணம் என்றும், அதில் தோட்ட மக்களின் வாழ்வு தரத்தை மேம்படுத்தும் திட்டம் உள்ளடங்கியதே தவிர, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்ளும் முமுறையை குறிப்பிடும் ஆவணம் அல்ல என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்த நிகழ்வு தொடர்பான செய்திகள் தமிழ் நாளிதழ்களிலும் வெளியாகின.
ஆகஸ்ட் 13ஆம் திகதி காலைக்கதிர் பத்திரிகையின் முதல் பக்கத்தில், "தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் சஜித்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்" என்ற தலைப்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் கருத்தை வெளியிட்டிருந்தது. “மலையகத் தமிழ் மக்கள் நலன் சார்ந்த, இத்தகைய ஒரு பரந்துபட்ட ஒப்பந்தம், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருடன் இதுவரை இந்நாட்டில் செய்யப் படவில்லை.
நாம் எதிர்நோக்கும், அரசியல், சமூக, கலாசார, பொருளாதார சவால்களை ஆவண மாகத் தொகுத்து நாம் ஐக்கிய மக்கள் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையாகச் செய்து முடித்துள்ளோம். ஆகவே. இந்த நிகழ்வு இந்திய வம்சாவளி மலையக இலங்கையர் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க நடப்பாகப் பதிவாகின்றது." அத்துடன், அன்றைய தினம் காலைமுரசு பத்திரிகையின் 3ஆம் பக்கத்தில் “பெருந்தோட்ட மக்களை வலுவூட்டுவதுதான் பிரதான நோக்கம் என்கிறார் சஜித் பிரேமதாஸ” என்ற தலைப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான சிறு செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்று வாக்குறுதிகள் மற்றும் சலுகைகளுடன் மட்டுப்படுத்தாமல் பெருந்தோட்ட மக்களை வலுவூட்டுவதே ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இங்கு அவதானிக்கப்படும் முக்கியமான விடயம் என்னவெனில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பை விமர்சிக்கும் கட்டுரைகள் அதற்கு முன்னைய நாட்களில் சிங்கள மற்றும் தமிழ் நாளிதழ்களில் வெளியாகியிருந்த போதிலும் குறித்த ஒப்பந்தம் குறித்து அவ்வாறான எதிர்ப்புக் கட்டுரைகள் நாம் எமது ஆய்வுக்கு உட்படுத்திய எந்தவொரு நாளிதழ்களிலும் பிரசுரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றப்படாத கோரிக்கைகளைத் தீடீர் திடீர் எனப் பெற்றுக்கொடுத்து மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் விதம் மற்றும் அதே போல் ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பலவிதமான வாக்குறுதிகள் மற்றும் ஒப்பந்தங்கள்மூலம் மலையக தோட்ட மக்களின் வாக்குகளைச் சேகரிக்க முயற்சிக்கும் விதம்குறித்த செய்திகள் சிங்களம், தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள பொதுவான மிக முக்கியமான அவதானிப்பு என்னவெனில், மொழி வேறுபாடின்றி அரச சார்ப்பு பத்திரிகைகளில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினரால் வழங்கப்படும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வாக்குறுதிகளை அதிகளவில் முன்னிலைப்படுத்தும் அதேவேளை தனியார் நிறுவனங்களினூடாக வெளியாகும் பல பத்திரிகைகள் சஜித் பிரேமதாசவின் இவ்வாறான செயற்பாடுகளை முன்னிலைப்படுத்த முயற்சிக்கின்றன.
கட்டுரை - சுபாஷினி சதுரிகா
மொழிபெயர்ப்பு - ரிக்சா இன்பாஸ்
12 வருடங்களின் பின்னர் 420 ரூபாவாக உயர்ந்த ரூபாவின் பெறுமதி : துர்ப்பாக்கிய நிலையாக கருதும் ரணில் தரப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |