டொலரின் பெறுமதி 2000 ரூபாவாக உயரும் என பொறுப்பை ஏற்க மறுத்த அரசியல்வாதிகள்
நாட்டைப் பொறுப்பேற்றால் டொலரின் பெறுமதி 2 ஆயிரம் ரூபாவாக மாறும், முழு நாடும் இருளில் மூழ்கும் என்று அப்போது கூறிய எதிரணியினர், நாட்டை முன்னேற்றும் அணி தற்போது தம்மிடம் இருப்பதாக கூறுகின்றார்கள். இவற்றை நம்பி பொதுமக்கள் தவறான முடிவை எடுத்து விடக் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இஸாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக மாவனல்ல பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடி நிலை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சவாலுக்குப் பயந்த தலைவர்களையா அல்லது சவாலை ஏற்ற தலைவரையாக எதிர்வரும் தேர்தலில் தெரிவு செய்யப் போகிறீர்கள். அடுத்த முறை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்வதற்காகவும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காகவும் அன்று நாட்டை ஏற்க சிலர் பின்வாங்கினார்கள்.
ஆனால் இன்று ஆட்சியை தங்களிடம் தருமாறு கேட்கிறார்கள். நாட்டை பொறுப்பேற்றால் முழுநாடும் இருளில் மூழ்கும் என்றும் டொலரின் பெறுமதி 2 ஆயிரம் ரூபாவாகும் என்றும் எதிரணி அன்று கூறியது. ஆனால் நாட்டை முன்னேற்றும் எம்மிடம் சிறந்த குழுவிருக்கிறது என்று இன்று சொல்கிறார்கள்.
பங்களாதேஷத்தைப் போன்று இலங்கை மாறுவதை காண விரும்புகிறீர்களா? இந்த தேர்தலில் தவறான முடிவை எடுத்து விடாதீர்கள். அவ்வாறு செய்தால் 6 மாதத்தில் மீண்டும் வீதிக்கு வர நேரிடும்.
இனவாதம், மதவாதமில்லாத தலைவரைத் தெரிவுசெய்ய கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். ஐ.எம்.எப் ஒப்பந்தத்தை மாற்றுவதாக எதிரணி பொய்யாக கூறிவருகின்றனர்.
ஐ.எம்.எப் உடன் பகிரங்கமாக கலந்துரையாட முன்வருமாறு எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதி சவால் விடுத்துள்ளார். அவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள். அதனால் மக்களை இரவில் விழுந்த குழியில் பகலில் விழ வேண்டாம் என்று கோருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |