ரணில் தரப்போடு இரகசிய சந்திப்பில் ஈடுபடும் சஜித்தின் சகாக்கள்
சஜித் பிரேமதாசவின் கட்சியில் இருக்கும் சிலர் ரணில் தரப்போடு கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாகவும், இன்னும் சில நாட்களில் அவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வருவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணிலுக்கு யாரும் சவாலல்ல...
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலுக்காக 39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பாளர்களில் நாட்டுக்காக முன்வந்திருக்கும் ஒரே வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும். ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் பல்வேறு சுயநல காரணங்களுக்கே போட்டியிடுகின்றனர்.
அதனால் நாட்டின் எதிர்காலம், மக்களின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து செயற்பட்டு வரும் ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச்செய்ய மக்கள் அணிசேர வேண்டும்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ரணில் விக்மரசிங்கவுக்கு ஆதரவளிக்க ஏனைய கட்சிகளில் இருந்து பலர் முன்வந்திருக்கின்றனர். இன்னும் பலர் வர இருக்கின்றனர்.
ஒருசில கட்சிகள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தாலும் அந்த கட்சிகளின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ரணில் விக்ரமசிங்கவுடனே இருக்கின்றனர். அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் இன்னும் சிலர் எங்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களும் எதிர்வரும் சில நாட்களில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வருவார்கள்.
மேலும், அண்மையில் ஆசிய நிறுவனம் ஒன்று மேற்கொண்டிருந்த கணிப்பீட்டிலும் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருந்த வேறு கணிப்பீடுகளின் அடிப்படையிலும் ரணில் விக்ரமசிங்கவே முன்னிலையில் இருக்கிறார்.
அதனால் ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள 39 பேட்பாளர்களில் யாருமே ரணில் விக்ரமசிங்கவுக்கு சவாலாகப்போவதில்லை. ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதியாகும். அதனை யாராலும் தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
நாமலின் அரசாங்கத்தில் பிரதமர்..! சஜித்திற்கு அதிக வாய்ப்பு - ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினரது தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |