நெருக்கடியான நேரங்களில் ரணிலுக்கு கிடைக்கும் பதவி: ருவான்
2005 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) வெற்றிக்கு புலிகள் தடையாக நின்றார்கள். வடக்கு மக்களை பலவந்தமாக வாக்களிக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன(Ruwan Wijewardena) தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலநது கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணிலின் நம்பிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டைப் பற்றி சிந்தித்து இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து இந்நாட்டின் எதிர்காலத்தையும் பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதே அவரது நம்பிக்கை.
ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் பிரதமராக ஆறு முறை பதவி வகித்தார். அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர் கட்சியைக் காக்க பாடுபடாமல் நாட்டைப் பற்றியே சிந்தித்தார்.
இந்நாட்டின் பொருளாதாரம் உடைந்திருந்த கால கட்டத்தில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஆட்சியைப் பொறுப்பேற்றார்.
2001ஆம் ஆண்டு பிரதமராக ஆட்சியமைத்து முன்னோக்கிச் சென்ற போது ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் அவரால் தனது நம்பிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. அவரது அரசாங்கம் வீழ்ந்தது.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிர்மறைப் பொருளாதாரம் நேர்மறைப் பொருளாதாரமாக மாற்றப்பட்டபோது மற்ற கட்சிகள் அவரது பயணத்தைத் தோற்கடித்தன. 2005 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு புலிகள் தடையாக நின்றார்கள். வடக்கு மக்களை பலவந்தமாக வாக்களிக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் பொருளாதார வேலைத்திட்டம் வலுவாக இருந்த காலத்திலும் ஈஸ்டர் தாக்குதலால் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைந்தது. அதன் பிறகு இந்த நாடு எப்படி வங்குரோத்து என்பது இந்த நாட்டு மக்களுக்கு தெரியும்.
இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் வங்குரோத்தாகி இருந்த நாட்டை மீண்டும் வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றினார். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு அவருடைய வேலைத்திட்டத்தை தொடரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் தற்போதைய ஜனாதிபதி எவ்வாறு செயற்பட்டார் என்பது மக்களுக்கு தெரியும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை நியமித்தாலும் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மீண்டும் நியமிக்கப்படுவார் என்பதை நாம் அறிவோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |