அரசாங்கத்தை கடுமையாக சாடும் ரஞ்சித் மத்தும பண்டார
இந்த அரசாங்கம் மக்களின் வாழ்க்கை செலவை அதிகரித்ததே தவிர குறைப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,''உத்தேச தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் விரைவில் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும்.
மின்கட்டண குறைப்பு
மின்கட்டண குறைப்பு தொடர்பான தீர்மானமும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டவையல்ல. அது சுயாதீன ஆணைக்குழுவான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானமாகும்.
இதேவேளை மின்சக்தி அமைச்சு மற்றும் நிதி அமைச்சு இதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவே தெரியவருகிறது. அதன் காரணமாகவே இந்த தீர்மானம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.
எவ்வாறிருப்பினும் தொடர்ச்சியாக இவ்வாறு செயற்பட அரசாங்கத்தை அனுமதிக்கப் போவதில்லை.
வேலைத்திட்டங்கள்
2015 நல்லாட்சி அரசாங்கத்தில் 100 நாட்களில் நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம். பொருட்களின் விலைகள் 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டன.
அது மாத்திரமின்றி பாரியளவில் மின் கட்டணமும் குறைக்கப்பட்டது. விலை குறைப்புக்கள் மாத்திரமின்றி அரச உத்தியோகத்தர்களின் சம்பளம், ஓய்வூதியம் என்பனவும் அதிகரிக்கப்பட்டன.'' என கூறியுள்ளார்.