திடீரென பதவி விலகிய கோட்டாபயவால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திடீரென பதவி விலகியதன் பின்னர் 6.9 மில்லியன் வாக்குகளை நாம் இழந்துள்ளோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் முன்மொழிந்துள்ளார். உண்மையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த மிகக் கடினமான முடிவு இதுவாகும் எனவும் அமைச்சர் பிரசன்ன கூறினார்.
எவ்வாறாயினும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன 6.7 மில்லியன் வாக்குகளைப் பெற்று 145 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
பொதுஜன பெரமுனவின் தியாகம்
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்கவைக்க 113 எம்பிக்கள் இருக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்றத்தில் 145 எம்பிக்கள் உள்ளனர்.
எமது கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கின்றபோதும் பொதுஜன பெரமுனவைச் சேராத ஒருவரை நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு அழைப்பு விடுத்தோம்.
பின்னர் நாங்கள் முன்மொழிந்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பெரும்பான்மையுடன் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் அரசியல் நிகழ்ச்சி நிரலை நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட போராட்டங்களின் அழுத்தத்தின் விளைவாக பதவி விலக நேரிட்டது.
எனவே, ஒரு கட்சியாக நாங்கள் பொதுவிருப்பத்திற்கு மதிப்பளிக்க முடிவு செய்தோம். இருப்பினும், தனிப்பட்ட முறையில் நான் அதை பொதுவிருப்பமாக ஏற்கவில்லை.
ஒரு குறிப்பிட்ட குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்க, எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மக்கள் திரண்டனர். அது இறுதியில் அந்த அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுத்தது.
எனவே, பொதுஜன பெரமுன மிகப்பெரிய தியாகத்தை செய்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இடைக்கால அரசாங்கத்தை அமைக்க கைகோர்க்க வேண்டுமென அவர்களின் முன்னாள் தலைவராக இருந்த இன்றைய ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.