தமிழர்களிடையே ஒற்றுமை ஒருபொழுதும் ஏற்படமுடியாது - ஆகையால் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும்
1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து - வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள், மலையாகத்தை சார்ந்த தமிழ் அரசியல்வாதிகள், யாரும் ஒன்றுபட்டு ஒரே கருத்தை முன் வைத்து தமது அரசியல், சமூக, பொருளாதார பிரச்சனைகளுக்கு, உரிமைகளுக்கு, குரல் கொடுத்ததாக சரித்திரம் கிடையாது.
அப்படியான சந்தர்ப்பந்தத்தில், எமது அரசியல் சமூக பொருளாதார உரிமைகளை பெற்று கொள்வதற்கு, கடந்த எழுபத்து மூன்று வருடங்காளக நாம் என்ன செய்கிறோம்? இலங்கை வாழ் தமிழ் அரசியல்வாதிகள், சீட்டு விளையாட்டில் உண்மையில் ‘ புறக்காம்மாரிஸ்’ வீரர்கள்.
காரணம் இலங்கையின் பௌத்த சிங்கள அரசுகள், ஒரு பொழுதும் எமது அரசியல் உரிமைகள் மட்டுமல்லாது, எந்த உரிமையையும் தரமாட்டார்கள் என்பது உண்மை யாதார்தம். ஆனால் வடக்கு கிழக்கு வாழ் மக்களது அரசியல் போராட்டம் என்பது, 1948ம் ஆண்டு முதல் எட்டிக்கு போட்டியாக தான் நடைபெற்றது, தற்பொழுதும் நடைபெறுகிறது.
அன்றிலிருந்து இன்று வரை, எந்த தமிழ் அரசியல்வாதியும், தாம் ஒரு குழுவாக, ஒரு கட்சியாக, ஒரு குரலாக எமது மக்களின் உரிமைகளுக்காக, இனத்தின் சார்பாக ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து செயற்பட்டது கிடையாது.
தமிழீழ விடுதலை புலிகள் ஓர் நடைமுறை அரசை, பல தசாப்தங்களாக நடத்தி வெற்றி நடை போடும் வேளையில், ‘வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்’(Unity within/in diversity) என்ற அடிப்படையில், 2001ம் ஆண்டு கூடியளவு மக்கள் ஆதரவுள்ள தமிழ் கட்சிகளை ஒருங்கிணைத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.
ஆனால் தூர்திஸ்டவசமாக, முள்ளிவாய்க்கால் அனார்த்தங்கள் இடம்பெற்று, அதனது இரத்த கறைகள், வடுக்கள், சோகங்கள் மாறும் முன்னரே, சில மாதங்களில், தனது சுயநலத்தின் அடிப்படையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு - செல்லப்பிள்ளை அரசியல் பேசும் கறுவாக்காட்டு அரசியல்வாதியினால், துடிக்கத் துடிக்க உடைக்கப்பட்டுள்ளது.
இதற்கு புலம்பெயர் தேசத்தில் ஏனோ தானோ என வாழும் சில ‘ புலன்’ பெயர்ந்தவர்களும், சிஞ்ச போட்டார்கள், போடுகிறார்கள். இன்று வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கென ஓர் ஒழுங்கான ஒரு அரசியல் கட்சி இல்லாது செய்த பெருமையை, ‘பிள்ளையார் சுழி’போட்ட கறுவாக்காட்டு அரசியல்வாதியையே சாரும்.
நிற்க, “இப்படிப் போகில் எப்படி வெல்லும்” என்ற வாசகம் தான் எமது முன் உள்ள கேள்வி. முள்ளிவாய்க்கால் இடம் பெற்று இன்று வரை இவர்களால், மக்களுக்குகு வெற்றிகரமாக என்ன செய்ய முடிந்தது? நாட்டில் பெரும் தொகை பணத்தை, காலத்தை விரயம் செய்து, தமிழ் கட்சிகளிற்கு எதிரான வசை பாடும் போராட்டங்கள நடைபெறுகின்றன.
மற்றவர்கள் செய்யும் சகலதிலும் குறை காண்பதும், வெளிநாடுகளிற்கு அல்லது ஐ.நா.விற்கு வரும்வேளையில் - ஐ.நா.வையும் மேற்கு நாடுகள், இந்தியாவை குறை கூறுவது, யாவும் நிச்சயம் தமிழ் மக்களுக்கான உரிமை போராட்டமாக இருக்க முடியாது.
அத்துடன், விடயம் புரியாதவர்களுக்கு, தாம் தான் போராட்ட காலத்தில், சர்வதேச பரப்புரையை பாரியளவில் செய்ததாக, கதை அழப்பதற்கு மேலாக இவர்களால் எதை சாதிக்க முடிந்தது? முன்னைய சர்வதேச பரப்புரை பற்றி எழுதுவதனால், என்னால் பக்க கணக்காக எழுத முடியும், ஆனால் தவிர்த்து கொள்கிறேன்.
குறை கூறுவதை தவிர்த்து
அன்று தமிழீழ விடுதலை புலிகள், ஒரு பலமான சக்தியாக இருந்து வெற்றி நடை போடும் வேளையில், அவர்கள் ஐ.நா.வை, மேற்கு நாடுகள், இந்தியாவை குறை கூறும் வேலையை தவிர்த்து, தமது இலக்கை நோக்கி வீறு நடை போட்டார்கள் என்பதே உண்மை யாதார்த்தம்.
இன்றைய நிலையில், வடக்கு கிழக்கு வாழ் ஈழத்தமிழர்கள் ‘வேற்றுமையில் ஒற்றுமை கண்டு’ எமக்குள் ஒன்றுபட்டு நகர, நகர்த்த வேண்டிய கட்டயத்தில் உள்ளோம். தமிழர்களின் வெளிவாரியான சுயநிர்ணய உரிமையை, அதாவது தமிழீழ இலட்சியமாக கொண்ட ஒவ்வொருவரின் கடமை இதுவாக தான் இருக்க முடியும்.
எமது ஒற்றுமையை குழப்புபவர்கள் அத்தனை பேரும், ‘இனத்தின் கோடாரி காம்புகளாகவே’, ஈழத் தமிழாரினால் பார்க்கப்பட வேண்டும், ஒதுக்கப்பட வேண்டும்.
ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமையை பொறுத்த வரையில், இன்று சிங்கள பௌத்தவாதிகளின் சகல கதவுகளும் பூட்டப்பட்டு, சர்வதேசத்தில் ஒரு சில ஜன்னல்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. அவையாவன – ஒன்று, ஐக்கிய நாடுகள் சபை. அதாவது ஐ.நா.மனித உரிமை சபையில் சில விடயங்கள் நடைபெறுகின்றன.
ஆனால் எமது விடயங்களை ஐ.நா. பொது சபை மற்றும் பாதுகாப்பு சபைக்கு நகர்த்த நாம் உழைக்க வேண்டும். 1983 யூலை மாதம் இடம் பெற்ற இனக்கலவரத்தை தொடர்ந்து, இந்தியா ஈழத்தமிழர்களுக்காக - ஐ.நா. பொது சபை, பாதுகாப்பு சபை, அன்றைய ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவில் எடுத்துரைத்தார்கள் என்பதை கறுவாக்காட்டு அரசியல்வாதி உட்பட சில புலம்பெயர் தமிழர்களுக்கு தெரியுமா?
இராண்டவதாக, ஐரோப்பிய ஒன்றியம். இங்கு சில விடயங்களை எம்மால் செய்யப்பட்ட போதிலும், பாரிய விடயங்களை செய்வதற்கு, தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை இடையூறாக உள்ளது என்பதை யாவரும் அறிவார்கள். இந்த இடையூறை நீக்குவதற்கு, 2006ம் ஆண்டு முதல் எத்தனை பேர் செயல்பாடுகிறார்கள்? இதற்கு யாரும் வேலை செய்யவில்லை என்பது தான் யாதார்த்தமான பதில்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மேல் மட்ட அரசியல் தலைவர்களுடன், யாரும் வேலை செய்கிறார்களா என்ற கேள்விக்கு இன்று பதில் இல்லை. அன்று எமது தமிழீழ தனிய அரசை, தனியாக வைத்து ஆட்சி செய்த, காலனித்துவ ஆட்சியாளரான – நெதர்லாந்து, போத்துக்கல் ஆகிய இரு நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நிலையில், நாம் இவர்கள் மூலமாக எதை சாதித்தோம் என்ற கேள்வி இங்கு எழுகிறது.
அன்று ஆயுத போராட்டத்து காலத்தில் நடைபெற்ற சர்வதேச அரசியல் செயற் திட்டங்களான – அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள், சட்ட நிபுணர்கள், முக்கிய புள்ளிகளுடனான சந்திப்புக்களை இன்று யார் செய்கிறார்கள்? 30வருடங்களாக ஆயுத போராட்டம் மூலம் தமிழர்களின் தாயாக பூமியான வடக்கு கிழக்கில் , சிங்கள பௌத்த அரசிற்கு நிகராக ஓர் நடைமுறை அரசை நடத்தியவர்கள், ஈழத்தமிழர் என்பதை சர்வதேசம் நன்கு அறியும்.
ஆயுத போராட்டம் மூலம், எப்படியாக ஓர் இனம், தமது வெளிவாரியான சுயநிர்ணயத்தை பெற்று கொள்ள முடியும் என்பதை அன்று யாதார்த்தமாக உண்மையாக விளக்கியவர்கள் ஈழத்தமிழர்.
பல தசாப்தங்களாக - சிங்கள பௌத்த அரசுகள், தமது புத்திஜீவிகள், கல்விமான்கள், தொழில்சார் நிபுணர்களை, தமது சர்வதேச பரப்புரை செயற்பாட்டிற்கு ஈடுபடுத்திவரும் இவ்வேளையில், கடந்த சில வருடங்களாக சில புலம்பெயர்வாழ் தமிழர் - சைக்கிள் ஓட்டம், நடை பயணம், காட்சிப்படுத்தல் போன்ற தம்மை தாமே திருப்திபடுத்தும் வேலைதிட்டங்களை, நமது பரப்புரையாக கொள்வது எவ்வளவு மிலேச்சத்தனமானது?
இவை யாவும், சிறந்த வேலை திட்டங்களானால், தமிழீழ விடுதலை புலிகள், அன்று, தமிழீழத்திற்கான சர்வதேச அங்கீகாரம் வேண்டி நின்ற வேளையில் செய்திருப்பார்கள். இதேவேளை பௌத்த சிங்கள அரசின் சில தமிழ் கைகூலிகள், தமிழீழ மக்களின் விசுவாசிகள் போல் மாறுவேடத்தில் நடித்து, ஐ.நா.மனித உரிமை வேலைகளை, கடந்த 2012ம் ஆண்டு முதல் நாசமாக்குகின்றனர்.
இதில் சிலர் ஏற்கனவே, இவர்களது கபட வேலைதிட்டங்கள் காரணமாக, ஐ.நா.விலிருந்து வெளியேற்றப்பட்டுள்னர். ‘உண்மை யாதார்த்தம்’, காலம் கடந்தாலும் என்றும் நிலைக்கும் என்பதற்கு இரு ஓர் நல்ல பாடம், உதாரணம். கபடநோக்குடன் மக்களை ஏமாற்றுபவர்கள், இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
தற்போது நம்மவர்கள் கையாழும் இவ் வழி வகைகள் மூலம், சர்வதேசத்திடமிருந்து நாம் எதையும் சாதிக்க முடியாது, முடிந்ததும் இல்லை என்பது தான் உண்மை யாதார்தம். இன்றும் இப்படியாக அப்பாவி தமிழரை பேய்காட்டு சுயவிளம்பர வேலை திட்டங்கள் தொடர்க்கின்றன என்பது மிகவும் கவலைகுரிய விடயம்.
நாம் எமது சர்வதேச பரப்புரைகளை செவ்வனே சரியான முறையில் மேற்கொள்ளும் அதேவேளை, இந்தியாவில் தமிழ் நாட்டுடன் மட்டும் நிற்காது, இந்தியாவின் மற்றைய மாநிலங்களிலும் எமது அரசியல் பரப்புரைகளை செய்ய வேண்டும்.
கடந்த சில வருடங்களாக பௌத்த சிங்கள அரசின் பிரதிநிகள், தமிழ் நாடு உட்பட மற்றைய மாநிலங்களுடன், தமிழீழ மக்களின் உரிமை போராட்டத்தை நசுக்குவதற்கு கடுமையாக உழைக்கிறர்கள் என்பது உண்மை யாதார்தம்.
இன்று நம்மிடையே அரசியல், சர்வதேச நடப்பு தெரியாதவர்களால் கூறப்படும் விடயம் என்னவெனில், “தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு”. உண்மையில் இது ஓர் கற்பனை கதை! காரணம், உலகில் எந்த நாட்டிலும், சர்வஜன வாக்கெடுப்பை ஐ.நா.பாதுகாப்பு சபை தவிர்ந்த வேறு யாராலும் நடைமுறை படுத்த முடியாது.
இவற்றிற்கு உதரணமாக – எரித்திரியா, கிழக்கு தீமூர், தென் சூடான் போன்ற நாடுகள் உள்ளன. ஏற்கனவே கூறியது போல், தற்போதைய நிலையில் ஈழத்தழிழர் விவகாரம், ஐ.நா.மனித உரிமை சபைக்கு மேல் ஒரு படி கூட செல்லாத நிலையில், உலகம் ஏற்க கூடிய சர்வஜன வாக்கெடுப்பு வடக்கு கிழக்கில் தற்போதைய நிலையில் ஒரு பொழுதும் நடைபெற முடியாது என்பதே உண்மை யாதார்த்தம்.
வேடிக்கை என்னவெனில், தமிழர்களுக்கான அர்ப்ப சொர்ப்ப அரசியல் தீர்வான 13வது திருத்த சட்டத்தையே கொடுப்பதற்கு சிங்கள பௌத்த அரசு தாயார் இல்லாத நிலையில், செல்லப்பிள்ளை அரசியல் நடத்துபவர்களும், அவர்களை போன்றவர்களும், தமக்கு தெரிந்த அரசியல் ஞானத்திற்கு அமைய எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இக் கூட்டதினரினால், சிங்கள பௌத்த அரசுகள், அரசியல்வாதிகள், பௌத்த பீடாதிபதிகள் ஏன் 13வது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதற்கு மக்களிற்கு விளக்கம் கொடுக்க முடியுமா? ஒழுங்கான அரசியல் அறிவுடன், இராஜதந்திரம் தெரிந்த எந்த தமிழாரும், 13வது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.
காரணம், இதன் மூலம், சிங்கள பௌத்த அரசுக்களின் அரசியல் தீர்விற்கான கபட நாடகங்களை எம்மால் சர்வதேசத்திற்கு நிரூபிக்க முடியும். இதேவேளை, 13வது திருத்த சட்டத்தை ஏற்பதன் மூலம், நாம் தொடர்ந்து சமஸ்டியையோ, வெளிவாரியான சுயநிர்ணய உரிமை போன்ற அரசியல் தீர்விற்கு போக முடியாது என்பது மிக அபாண்டமான பொய், மிகைபடுத்தல்.
உண்மையில், உலகில் அப்படியான ஒரு நியதியோ, சர்வதேச சட்டமோ கிடையாது. இதற்கு – பிரித்தானியாவில் ஸ்கொட்லாந்து, ஸ்பெயினில் பாஸ்க், பாசிலானோ, அமெரிக்காவில் அலாஸ்கா, போட்டரீக்கோ போன்ற பல வெளிவரியான சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் உதரணமாகவுள்ளன.
சர்வதேச பரப்புரை வேலை
ஆகையால் நாம் ஓர் நியாயமாண பரப்புரை வேலை திட்டங்களை - புத்திஜீவிகள், கல்விமான்கள், துறைசார் நிபுணர்கள், சர்வதேச மொழிகளில் புலமை கொண்டவர்களையும் இணைத்து சர்வதேச வேலைகளை ஆயுத போராட்ட காலங்களில் முன்னெடுத்தது போல், முன்னெடுக்க வேண்டும்.
இதற்கு தமிழ் அரசியல்வாதிகளும், இளைஞர், யுவதிகளும் இணைத்து செயற்பட வேண்டும். இதன் மூலமே நாம் ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஓர் வெற்றியை அடைய முடியும். தற்போதைய நிலையில் ‘தடி எடுத்தவன் எல்லாம் தம்பிரான்’ என்பதுடன் ‘தன்னால் செய்யப்படுவது தான் தமிழர்களிற்கான செயற் திட்டம்’ என சிலர் எண்ணி செயற்படுவதனால், கடந்த 13 வருடங்களாக நாம் எதையும் சாதிக்க முடியவில்லை.
தற்பொழுது சில ஈழத்தமிழர்களுடைய போக்கு, அதிலும் சில புலம் பெயர்ந்தவர்களுடைய போக்கு, எமக்கு மிஞ்சிய எஞ்சியவற்றையும் பறிகொடுக்கும் நிலைக்கு இட்டு செல்லும், செல்லுகிறது என்பதே உண்மை யாதார்த்தம். எம் மீதான மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு, போர்குற்றங்கள் போன்றவற்றிகான செயல் திட்டங்கள், பரப்புரைகள் சில நாடுகளில், சர்வதேசம் ஏற்று கொள்ளும் நிலையில் நடைபெறவில்லை என்பது உண்மை யாதார்த்தம்.
ஒழிப்பு மறைப்பின்றி கூறுவதனால், எமது அரசியல் வேலைகள் பரப்புரைகள் - கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளிலேயே உண்மையாக விசுவசாமாக நடைபெறுகின்றன. இதே இடத்தில், ஆவுஸ்திரேலியா, அமெரிக்கா தவிர்ந்த மற்றைய ஐரோப்பிய நாடுகளின் செயற்பாடுகள், மந்த நிலையிலேயே காணப்படுகிறது.
இந்நாடுகளில் போட்ட போட்டியுடன், ‘தடி எடுத்தவன் எல்லாம் தம்பிரான்’ என்ற அடிப்படையில், பரப்புரையின் பெயரால் பித்தலாட்டங்கள் நடைபெறுகின்றன. இவை எப்படியாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க முடியும்? ஆகையால் நாட்டிலும் புலத்திலும், ஈழத்தமிழர்கள் அரசியல் விடுதலைக்கான உண்மையான விசுவசமான வேலை திட்டங்களை, சகல கட்சிகள், குழுக்கள், சங்கங்கள் ‘வேற்றுமையில் ஒற்றுமை காணும் அடிப்படையில்’, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
யாழ் மாநாகரசபையும் மணிவண்ணனும்
முள்ளிவாய்கால் அனார்த்தங்களுடன் வலுப்பெற வேண்டிய ஈழத்தழிழர்களின் ஒற்றுமை, இன்று தலை கீழாக நாட்டிலும் புலத்திலும், பல பல பிரிவுகளுடன் தாண்டவம் ஆடுகிறது. இதற்கான காரணங்களை, பல்வேறு கட்டுரைகளில் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளேன்.
இவற்றை உண்மை யாதார்தங்களின் அடிப்படையில், மிக சுருக்கமாக கூறுவதானால் - வடக்கு கிழக்கு வாழ் மக்கள், அதாவது ஈழத்தமிழ் மக்கள், நாட்டிலும் புலம்பெயர் தேசத்திலும் வாழ்க்கையில் அறவே ஒற்றுமையாகமாட்டார்கள் என்பது திண்ணம்.
ஆகையால், நாம் எதிர்காலத்தில் எந்த சந்தர்பத்திலும், பிரிவுகள் ஒற்றுமையின்மையுடன் தான் பயணிக்க வேண்டும். பிரிந்தவர்கள், சில விடயங்கள் அல்லது பல விடயங்களில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’என்ற அடிப்படையில் பயணிக்க முடியும்.
இந்த அடிப்படையிலே ஈழத்தமிழர்களின் எதிர் காலம் அமைய முடியும் என்பது உண்மை யாதார்த்தம். பலருக்கு ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காண்பது என்பது புரியாத புதிராக இருக்கலாம். யாழ் மாநாகர சபையையும், இதனது நகர பிதா, மணிவண்ணனின் நிலைபாட்டை, இதற்கு நல்ல உதரணமாக கொள்ளலாம். இன்று யாழ் நகர பிதாவாக மணிவண்ணன் பதவியில் உள்ளரானால், இதற்கு ஈ.பி.டி.பி.யின் உதவியுடனேயே இவர் நிலைக்க முடிகிறது.
இதேவேளை, யாழ் மாநாகர சபை காவலாலிகளுக்கான சீருடை விடயத்தில், யாழ் நகரபிதா மணிவண்ணன் கைது செய்யப்பட்ட வேளையில், இவரை சட்ட ரீதியாக காப்பாற்ற முன்வந்துள்ள எம். ஏ. சுமந்திரனின் நிலைப்படும் வரவேற்க தக்கது.
இவற்றை டக்ளஸ் தேவனந்தவும், சுமந்திரனும் வேறு சில நசுக்கான நோக்கங்களிற்கா செய்திருந்தாலும், இவை ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற அடிப்படையிலேயே நிறைவேறியுள்ளது.
காரணம் இவர்கள் இருவரது உதவிகளையும், மணிவண்ணன், கறுவாகாட்டு அரசியல்வாதி போல் அல்லாது, தாராள மனப்பான்மையுடன் ஏற்று கொண்டுள்ளார். டக்ளஸ் தேவனந்தாவின் உதவியை, மணிவண்னணன் பெற்றிருக்கபடாது என சிலர் விவாதம் செய்யலாம்.
ஆனால் “எனக்கு / எமக்கு மூக்கு போனாலும் பறாவாயில்லை, எதிரிக்கு சகுனம் பிழைத்தால் காணும்”; என்ற கொள்கையில் கஜன் பொன்னம்பலம் இருக்கும் பொழுது - தேசியப்பற்று, அனுபவம், திறமை, அர்பணிப்பு, சேவை நோக்கம் கொண்ட மணிவண்ணனன் என்ன செய்வது?
சில நாட்களுக்கு முன்னர், முல்லைதீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையில் பௌத்த விகாரை நிறுவுவது பற்றிய விடயத்தில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையையும், ‘ வேற்றுமையில் ஒற்றுமை கணப்பட்டதாக’ நிச்சயம் ஏற்று கொள்ளலாம்.
ஆகையால் ‘யார் குத்தியாவது அரிசி ஆகட்டும்’ என்ற அடிப்படையில், நாம் ‘‘ வேற்றுமையில் ஒற்றுமை” காண வேண்டும். இவற்றை தவிர்த்து, மற்றவர்கள் செய்வது யாவும் தவறு. இந்தியா தவறு, மேற்குலகம தவறு, ஐ.நா. தவறு என்று தினமும் மனநோயாளிகள் போல் புசத்திக் கொண்டு, தமிழ் மக்களின் இருப்பை, யாதார்த்தை சூதாட முடியாது.
செல்லப்பிள்ளை அரசியல் செய்யும் சிலருடைய எண்ணம் என்னவெனில், இவ்வுலகில் தாம் மட்டும் தான் நேர்மையான, விசுவசமான, அரசியில்வாதிகள் எனவும், தாம் தான் தமிழீழ விடுதலை புலிகளின் விசுவாசிகளென, தம்மை தாமே பறை சாற்ற முற்படுகிறார்கள்.
உண்மைகளை என்னால் இங்கும் பக்க கணக்காக எழுத முடியும். தவிர்த்து கொள்கிறேன். சுருக்கமாக கூறுவதனால், இவர்கள் தாங்களும் குழம்பி, மக்களையும் கடந்த ஒரு தசாப்தங்களாக குழப்புகிறார்கள் என்பதே உண்மையும் யாதார்தமும்.
யாழ் ஊடக அமையம் (மையம்), இன்று “கோமளிகள் கும்மாளம்” நடத்தும் நாடக கொட்டகையாக மாறியுள்ளதா என பலர் சந்தேகிக்கிறார்கள். காரணம், அங்கு நடைபெறும் பெரும்பலான பத்திரியாளர் மாநாடுகள், ஏழு தசாப்பதங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்ட மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடயங்களை அடிப்படையாக கொண்டு, மக்களிற்கு ஆக்கபூர்வமான தகவல்களையோ செய்திகளை கூறும் இடமாக காணப்படவில்லை.
சிலருடைய பத்திரிகையாளர் மாநாடுகள், மற்றவர்களில் பிழை காண்பதற்கும், கரி பூசுவதற்கும் பாவிக்கப்படும் இடமாக மட்டும் காணப்படுகிறது. மீண்டும், கேட்கிறேன், “இப்படிப் போகில் எப்படி வெல்லும்”எமது நிலை? கவலைக்குரிய விடயம் என்னவெனில், ஈழத்தமிழர்களிற்கு ஓர் அரசியல் தீர்வை பெற்று கொடுக்க வேண்டுமென சர்வதேசம், மேற்குலகம், இந்தியா தயராக உள்ள நிலையில், ஈழத்தமிழர்கள் இதற்கு தயராக இல்லை என்பது உண்மை யாதார்த்தம்.
இதற்கு யாழ் ஊடக அமையமும் (மையம்), முட்டுக்கட்டையக உள்ளதா?