இரு வெவ்வேறு இடங்களில் பதிவான திருட்டு சம்பவங்கள்! பொதுமக்களின் பாராட்டுக்குரிய செயல்
நாடளாவிய ரீதியில் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றது.
நுவரெலியா
யுவதியொருவரின் கைத்தொலைபேசியை பறித்துக் கொண்டு தப்பியோட முயன்ற நபரொருவர் பொதுமக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு பின்னால் உள்ள பூங்கா வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள வீதியொன்றில் நடந்து சென்ற யுவதியொருவரிடம் கைத்தொலைபேசியை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபரை வீதியால் நடந்துசென்ற பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
யுவதியின் கையடக்கத் தொலைபேசியை அவர் கைப்பற்றிய போது, அவர் உதவிக்காக அலறியுள்ளார். அதன்படி, அருகில் இருந்தவர்கள் சந்தேக நபரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நுவரெலியா களுகெலே பிரதேசத்தில் வசிக்கும் 27 வயது இளைஞர் ஆவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காரை நகர்
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர் கோவளம் பகுதியில் இன்று மாலை திருட்டில் ஈடுபட்ட ஐவர் அடங்கிய கும்பல் ஒன்று அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப் புடைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பட்டாரக வாகனம் ஒன்றும் திருடப்பட்ட வீட்டு நிலைகளும் பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளது.
சுழிபுரம், பண்டத்தரிப்பு பகுதிகளைச் சேர்ந்த ஐவர் அடங்கிய இளைஞர் குழு ஒன்று இவ்வாறு காரைநகர் கோவள பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள வீட்டு நிலைகளை திருடிய சந்தர்ப்பத்தில் அப்பகுதிமக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
காரைநகர் - மணற்காடு அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இன்றைய தினம் கோவளப்பகுதி மக்களின் திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
பிடிக்கப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் காரைநகர் பகுதியை சேர்ந்தவர் என
தெரிவிக்கப்படுகிறது.