ஜனாதிபதி தேர்தல்: ராஜபக்சர்கள் ரணிலுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென நாம் அவருக்கு அழைப்பு விடுக்கிறோம்.
நீங்கள் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் ஆயின், இப்போதே தயாராகுங்கள். 2024ஆம் ஆண்டில் நாம் மீண்டும் மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவருவோம்.
பெரமுனவுடன் மட்டும் பேச்சுவார்த்தை
நாங்கள் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள். எங்களுக்கு வேறு கட்சிகள் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நான் இந்தவேளையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காட்டாட்சியை நாட்டிலிருந்து இல்லாது செய்தமைக்காக. ஆனால், அதேநேரம் 2024 ஆம் ஆண்டுவரை தான், நாம் அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தோம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
2024 இலிருந்து 2029 வரை நாம் அவரை ஜனாதிபதியாக்கப் போவதில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டும், பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் அவருக்கு அழைப்பு விடுக்கிறோம்.
ஏனைய தரப்பினருடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி, தோல்வியடைய வேண்டாம் என்றும் நாம் ஜனாதிபதிக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |