நீதிபதிகளின் இடமாற்றம் : அவசர விவாதம் நடத்த பொதுஜன பெரமுன கோரிக்கை
பௌத்த சாசனம் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு எதிரானதாகக் கூறப்படும் வன்முறைச் சம்பவங்கள், நீதிபதிகளின் திடீர் இடமாற்றங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு அவசர விவாதங்களை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நேற்று(08.11.226) கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதித்துறையின் சுதந்திரம்
பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கான அரசின் அரசியலமைப்புச் சார் பொறுப்பு, பௌத்த பிக்குகளை இலக்காகக் கொண்ட சமூக ஊடகப் பிரசாரங்கள் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்துக்கு எதிரான தீர்ப்புகளை வழங்கிய அல்லது அரசின் நடவடிக்கைகளைக் கேள்விக்குட்படுத்திய நீதிபதிகளின் திடீர் இடமாற்றங்கள் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுளார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது இந்த விடயங்கள் புறக்கணிக்கப்படலாம் என்பதால், இரண்டு தனித்தனி அவசர விவாதங்களை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரப்பட்டுள்ளது.