ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலீட்டாளர்களை ஈர்க்க இலங்கை அரசு முன்வைத்துள்ள திட்டம்
இலங்கையில் புதுப்பிக்கப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சியில் புதிய திட்டமொன்றை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையை வெளிநாட்டு மூலதனத்திற்கு மிகவும் கணிக்கக்கூடிய மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த இடமாக மாற்றுவதற்காக அரசாங்கம் முதலீட்டு ஒப்புதல்கள் மற்றும் சலுகைகளை நெறிப்படுத்தி வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
துபாயில் நடந்த இன்வெஸ்ட் இலங்கை முதலீட்டாளர் மன்றத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வெளியுறவுக் கொள்கை
சில முதலீடுகள் 15 ஆண்டுகள் வரை வரி விடுமுறைக்கு தகுதி பெறுகின்றன, அத்துடன் பிற சலுகைகளும் கிடைக்கும். புதிய முதலீட்டு ஊக்குவிப்புச் சட்டத்தின் மூலம், இவை அனைத்தும் நெறிப்படுத்தப்படும் என தெளிவுப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் நடுநிலை வெளியுறவுக் கொள்கை மற்றும் விரிவடையும் வர்த்தக அணுகல் ஆகியவை பிராந்திய தளத்தைத் தேடும் மத்திய கிழக்கு வணிகங்களுக்கு கவர்ச்சிகரமானதாக அபேசிங்க கூறியுள்ளார்.
அதில், நாடு சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் ஈடுபடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயம், சுற்றுலா, கடல்சார் தளவாடங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமைத் துறைகளாக இருப்பதாகவும், ஆடம்பர சுற்றுலா, துறைமுகங்கள் மற்றும் பசுமை எரிசக்தி திட்டங்களில் வாய்ப்புகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
போக்கு தெளிவாகவும் ஸ்திரத்தன்மை நடைமுறையிலும் உள்ளது. இதற்கான சீர்திருத்தங்கள் தற்போது நடந்து வருகின்றன. வியட்நாம், தென் கொரியா மற்றும் இந்தியாவின் திருப்புமுனை பற்றி நாங்கள் பேசுகிறோம். துபாய் எவ்வாறு உருவானது என்பது பற்றி நாங்கள் பேசுகிறோம் அதற்கு அடுத்தப்படியாக இலங்கை உள்ளது என்றும் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களுக்கான வாய்ப்பு
கொள்கை முரண்பாடு மற்றும் ஊழல் காரணமாக கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை வளர்ச்சி வாய்ப்புகளை இழப்புக்களை சந்தித்தது.
மாறாக, 2022 முதல் இந்த நிலைமை மாறிவிட்டது, சீர்திருத்தங்கள் முதலீட்டிற்கான சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் இப்போது நிலையானதாகவும், கணிக்கக்கூடியதாகவும் உள்ளது. முக்கிய சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படுகின்றன, கொள்கைகள் சீரானவை, முதலீட்டிற்கான சட்ட கட்டமைப்பு வலுப்படுத்தப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் மற்றும் நிலக் கொள்கை சீர்திருத்தங்கள் நீண்டகால முதலீட்டுத் தடைகளை நீக்குகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இனி ஒரு சூதாட்டம் அல்ல. முதலீட்டாளர்கள் நீண்டகால பங்குதாரர்களாக இலங்கையின் வளர்ச்சி பயணத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியும் என அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.