வடக்கு, கிழக்கு தமிழர்களின் பிரச்சினை! நாடாளுமன்றில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு (Live)
நாடாளுமன்றத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்த நிலையில் விசேட உரையொன்றையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றினார்.
இதன்போது அவர் கூறுகையில், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார்.
அத்துடன், காணாமல் போனவர்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாகவே தீர்வு காண முடியும்.
மேலும், கடந்த காலங்களில் சில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
நாடாளுமன்றத்திற்கு இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்திருந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது விசேட உரையொன்றையும் ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற அமர்வு இன்று (10.11.2022) முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
முற்பகல் 09.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, முற்பகல் 10.30 முதல் பிற்பகல் 5 மணி வரை, சிறுகோரிக்கை நீதிமன்றங்களின் நடவடிக்கைமுறை, நீதித்துறை (திருத்தம்), மாகாணங்களின் மேல் நீதிமன்றம் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்), குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்), கண்டிய திருமண, மணநீக்கம் (திருத்தம்), நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தம்), குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்), சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் (திருத்தம்), அபாயகரமான விலங்குகள் (திருத்தம்), சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிகள், கடற்றொழில், நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதன்பின்னர், பிற்பகல் 5 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.