இலங்கை நாடாளுமன்றத்தை வடிவமைத்த தமிழர்: யார் இந்த பூலோகசுந்தரம்..!
தனித்துவமானதும், பாதுகாப்பு மிக்கதுமான இலங்கையின் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியானது ஏனைய உயர் அவைகளை விட தனிச் சிறப்பு மிக்கது.
நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட இலங்கையின் அமைவிடத்திற்கு எப்படி தனிச்சிறப்பு காணப்படுகின்றதோ, அதேபோன்றதொரு வடிவமைப்பில் இலங்கையின் நாடாளுமன்றமும் அமையப் பெற்றிருப்பது விசேட அம்சமாகும்.
1979ஆம் ஆண்டில் கட்டிட பணியை தொடங்கி 1982 ஆம் ஆண்டு நிறைவை எட்டிய இலங்கையின் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர் ஒரு தமிழர் என்பது பலர் அறியா உண்மை.
உலக புகழ்பெற்ற கட்டிட கலைஞர் ஜெஃப்ரி பாவாவுடன் இணைந்து பல்வேறு வெற்றிகர பணிகளை நிகழ்த்திய, யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட கந்தசுவாமி பூலோகசுந்தரம் தான் அவர்.
1932ஆம் ஆண்டு பிறந்து, இந்த ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி காலமான கலாநிதி கந்தசாமி பூலோகசுந்தரம், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதல் தர கௌரவப் பட்டம் பெற்றவர்.
யாழ். பிறப்பிடம்
அவர், லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற புலமைப்பரிசில் பெற்று 1960இல் படிப்பை முடித்தார்.
பிறகு, 1960ஆம் ஆண்டு கொழும்புக்குத் திரும்பி, இலங்கை அரச சீமெந்து நிறுவனத்தில் திட்டப் பொறியாளராகப் பணியாற்றினார்.
இந்த நேரத்தில், கலாநிதி பூலோகசுந்தரம், கட்டிடக் கலைஞர் ஜெஃப்ரி பாவாவின், எட்வர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் கட்டிடக்கலை நிறுவனத்திற்கு (ER&B) முறைசாரா ஆலோசனை சேவைகளை வழங்கி வந்துள்ளார்.
அதன் தொடர்ச்சியில், 1966ஆம் ஆண்டில் ஜெஃப்ரி பாவாவுடன் சம பங்குதாரராக சேர்ந்து, எட்வர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் ஆகியவற்றுடனும் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.
1979இல் இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனத்தின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்ட இவரே அக்காலகட்டத்தில் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட இளம் தலைவராக திகழ்ந்துள்ளார்.
வாழ்நாள் பங்களிப்பு விருது
இதனை தொடர்ந்து, பூலோகசுந்தரமும் ஜெஃப்ரி பாவாவும் இணைந்து அக்காலத்தில் மிகவும் வெற்றிகரமான கட்டிடக்கலை மற்றும் பொறியியல் நிறுவனங்களில் ஒன்றை உருவாக்கினர்.
இருவரும், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மிகவும் வெற்றிகரமான கட்டிடக்கலை மற்றும் பொறியியல் நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
கட்டிடக்கலை மற்றும் பொறியியலில் பூலோகசுந்தரம் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்களை அங்கீகரிக்கும் வகையில், 2021ஆம் ஆண்டில் கட்டிடக்கலைக்கான வாழ்நாள் பங்களிப்பு விருதை கலாநிதி பூலோகசுந்தரம் பெற்றார்.
பூலோகசுந்தரமும் பாவா ஜெஃப்ரியும், இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் பல சிறந்த திட்டங்களை வடிவமைத்த நிலையில் அவர்களின் கலைகளுள் மதிப்புமிக்க இலங்கை நாடாளுமன்றம், பெந்தொட்ட பீச் ஹோட்டல் மற்றும் ருஹுணு பல்கலைக்கழகம் ஆகியவையும் அடங்குகின்றன.
ருஹுணு பல்கலைக்கழகம்
1978 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் சிறப்பு ஆணையால் நிறுவப்பட்டு, 1984 ஆம் ஆண்டு முழுமையான பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்ட ருஹுணு பல்கலைக்கழகம், இலங்கையின் ஆறாவது பழமையான பல்கலைக்கழகமாகும்.
ருஹுணு பல்கலைக்கழகத்திற்கான புதிய கட்டிட வளாகமும் ஜெஃப்ரி பாவா மற்றும் பூலோகசுந்தரம் ஆகியோரினாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும்.
முன்னதாக, இலங்கையின் பழைய நாடாளுமன்ற கட்டிடம், 1930ஆம் ஆண்டு, இலங்கையின் பிரித்தானிய ஆளுநர் சர் ஹெர்பர்ட் ஸ்டான்லியினால் கொழும்பின் காலி முகத்திடலில் கடலுக்கு எதிரே திறந்து வைக்கப்பட்டது.
இது சட்டமன்றக் கூட்டங்களுக்காக வடிவமைக்கப்பட்டு பின்னர், மாகாண சபை, பிரதிநிதிகள் சபை, தேசிய மாகாண சட்டமன்றம் மற்றும் இலங்கை நாடாளுமன்றம் ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்பட்டது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம்
இதற்கு பின்னர், 1967ஆம் ஆண்டு சபாநாயகர் சர் ஆல்பர்ட் எஃப்.பெரிஸின் கீழ், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், காலி முகத்திடலில் உள்ள நாடாளுமன்றத்திற்கு எதிரே பெய்ரா ஏரியின் எதிர் பக்கத்தில் ஒரு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானித்தனர்.
ஆனால், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் ஸ்டான்லி திலகரத்ன சபாநாயகராக இருந்தபோது, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான திட்ட வரைபு பொறுப்பை கட்டிடக் கலைஞர்களிடம் ஒப்படைத்தனர், இருப்பினும் பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
அதன் பின்னர், 1979 ஜூலை 4ஆம் திகதி, அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச, கொழும்பிலிருந்து கிழக்கே சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தியவன்னா ஓயாவில், 5 ஹெக்டேர் தீவில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்ட அரசாங்கத்திடம் அனுமதி பெற்றார்.
அதற்கமைய, கட்டிட வேலைகளுக்கான வடிவமைப்பு பொறுப்பு ஜெஃப்ரி பாவாவிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அதன் சம பங்குதாரரான பூலோகசுந்தரத்துடன் இணைந்து இலங்கையின் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் வடிவமைக்கப்பட்டது.
அத்துடன், ஜப்பானிய கட்டிடக்கலை நிறுவனத்துடன் பூலோகசுந்தரம் இணைந்து இலங்கை நாடாளுமன்ற கட்டிடத்திற்கான உலோக அமைப்பின் தரத்தை கண்டறிந்து அதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தார்.
இக்கட்டிடமானது, ஜப்பானின் இரண்டு மிட்சுய் குழும நிறுவனங்களின் கூட்டமைப்பால் 25.4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டது.
இந்த திட்டம் 26 மாதங்களுக்குள் முடிக்கப்பட்ட நிலையில் 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவால் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.
பூலோகசுந்தரத்தின் சிறந்த கட்டிடக்கலை சேவைக்கு சான்றாக இலங்கை நாடாளுமன்ற கட்டிடத்தின் நுழைவாயிலில் அவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் சிங்கள இனப்படுகொலை என பல்வேறு சிக்கலுக்குரிய காலக்கட்டங்களிலும் தனது கல்வித்தரம் மூலம், தற்போது வரை இலங்கை அரசியலுக்கு பெரும் அடையாளமாக திகழ்ந்து வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்த தமிழர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தற்போதைய கட்டிடக்கலை நிபுணர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக திகழும் கலாநிதி கந்தசாமி பூலோகசுந்தரம், 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி இயற்கை எய்தினார்.
அவர் மறைந்தாலும் இன்னும் பல நூற்றாண்டுகள் அவர் பெயர் உச்சரிக்கும் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதி இலங்கைத் தமிழரால் இலங்கைக்கு கிடைத்த அரும்பெரும் செல்வம் என்றே சொல்ல வேண்டும்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |