அநுர அரசாங்கத்தின் செயலால் அதிர்ச்சியில் இலங்கை அரசியல்வாதிகள்
கடந்த மூன்று மாதங்களாக எமது அரசாங்கம் செய்துள்ள வேலைகளைப் பார்த்து பல அரசியல்வாதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களது எதிர்கால இருப்பு தொடர்பான நம்பிக்கையை அவர்கள் இழந்துள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் பணி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முட்டை இல்லை, கோழி இறைச்சி இல்லை, அரிசி இல்லை, தேங்காய் இல்லை, வெங்காயம் இல்லை, உருளைக் கிழங்கு இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
இன்று நாம் இந்தப் பிரச்சினை உருவாகும் இடத்தையும், அதற்கான பதிலை வழங்க வேண்டிய இடத்தையும் கண்டறிந்து எமது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான பணிகளைச் செய்து வருகின்றோம்.
இன்று முட்டைகள் பற்றாக்குறை இல்லை, இருந்ததை விடவும் குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கின்றன. அதே போன்று கோழி இறைச்சி தேவையான அளவில் இருக்கின்றது. அவற்றின் விலைகளும் தற்போது குறைந்துள்ளன.
இப்போது சந்தையில் நிறைய வெங்காயம், கிழங்கு இருக்கின்றது. அவற்றின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசாங்கம் நெல் கொள்வனவுக்கான பொறிமுறையைத் தயாரித்து வருகின்றது. விரைவில் அரிசி விலை நிலையான நிலைக்கு வரும்.
இவற்றைப் பார்த்து சகிக்க முடியாமல் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் அரசியல் ரீதியாக வங்குரோத்தடைந்தவர்களே தவிர பொதுமக்கள் அல்ல.
கடந்த மூன்று மாதங்களாக நாம் செய்ததைப் பற்றி அவர்கள் அதிர்ச்சியடைந்து அவர்களது எதிர்கால இருப்பு தொடர்பில் நம்பிக்கை இழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
