மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களைப் பெற்றதை போன்று எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு மூன்று ஆசனங்களைப் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தெளபீக் (M.S. Thowpik) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை - கிண்ணியாவில் நீண்ட காலமாக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த பூவரசன்தீவையும்,கல்லடிவெட்டுவானையும் இணைக்கும் வடசல் பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
90% சதவீதம் தனித்துப் போட்டியிடுவது என்றே கட்சி தீர்மானித்துள்ளது.விகிதாசாரம் முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் அவ்வாறு நடத்தப்பட்டால் எமது பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும்.
தமிழ் கூட்டமைப்பு 60 வருட காலமாக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மக்களிடம் கேட்டால் பெரும் கவலையை தெரிவிக்கின்றார்கள்.
நாம் யாரிடம் பேச வேண்டும் என்பதை அறிந்து கொண்டு உரிய தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் அபிவிருத்தியைச் செய்ய முடியும்.
கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களைப் பெற்றதை போன்று எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் மூன்று ஆசனங்களைப் பெறுவோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதல் அமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கட்சி உயர் பீடம் தீர்மானிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
