இலங்கை வான்வெளி வருமானத்தையும் இழக்கும் நிலைமை
இலங்கை நிலவும் விமான பயண கட்டுப்பாட்டாளர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக இலங்கை வான் பரப்பின் ஊடாக பயணிக்கும் சர்வதேச விமானங்களுக்கு வழங்கும் வான்வெளி சேவைகளை சில வெளிநாடுகளுக்கு செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
150 விமான கட்டுப்பாட்டாளர்கள் இருக்க வேண்டிய நிலைமையில் 80 பேர் மட்டுமே இருக்கின்றனர்
இலங்கையில் 150 விமான பயணக் கட்டுப்பாட்டாளர்கள் இருக்க வேண்டும்.எனினும் 80 பேர் மாத்திரமே இருப்பதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமையில் காரணமாக அவர்கள் நாட்டின் தரையிறங்கும் மற்றும் புறப்பட்டுச் செல்லும் விமானங்களுக்கு மாத்திரம் வான்வெளி சேவைகளை வழங்கி வருகின்றனர் என்பதுடன் இலங்கை வான் பரப்பின் ஊடாக செல்லும் சர்வதேச விமானங்களுக்கு சேவைகளை வழங்குவதில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
தினமும் இலங்கை வான் பரப்பின் ஊடாக சர்வதேச விமான சேவைகளுக்கு சொந்தமான சுமார் 100 விமானங்கள் பறப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த விமானங்களுக்கு வான்வெளி விமான கட்டுப்பாட்டு சேவைகளை வழங்க ஒரு விமானத்திற்கு 250 டொலர்கள் அறவிடப்படுகின்றன.
இதனால், இந்த சர்வதேச விமானங்களுக்கான வான்வெளி சேவை கைவிட்டு போனால், நாட்டுக்கு சுமார் 25 ஆயிரம் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்படும். சர்வதேச விமான கட்டுப்பாடு தொடர்பான புதிய சட்டத்திற்கு அமைய ஒரு விமான கட்டுப்பாட்டாளருக்கு இரவு நேரத்தில் 10 மணி நேரம் மட்டுமே சேவையாற்ற முடியும்.
பகல் நேரத்தில் 12 மணி நேரம் சேவையாற்ற முடியும். இதனை மீறி சேவையில் ஈடுபடுவது அந்த சட்டத்தை மீறும் செயலாகும்.
நிலவும் விமான கட்டுப்பாட்டாளர்களின் தட்டுப்பாடு காரணமாக தற்போது ஒரு கட்டுப்பாட்டாளர் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக இரவு நேரத்தில் சேவையாற்றி வருகிறார். பகல் நேரங்களில் 14 முதல் 18 மணி நேரம் சேவையாற்றுவதாக கூறப்படுகிறது.
இலங்கையின் விமான கட்டுப்பாட்டு சேவை இந்திய மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு கிடைக்கலாம்
இந்த நிலைமையின் அடிப்படையில், சர்வதேச விமான பயண கட்டுப்பாட்டு சட்டத்தை மீறியமை சம்பந்தமாக இலங்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இலங்கை வான் பரப்பின் ஊடாக பயணிக்கும் சர்வதேச விமான பயண கட்டுப்பாடு சேவைகள் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கிடைக்கக்கூடும்.
இந்த நிலையில், விமான பயண கட்டுப்பாட்டாளர்களாக புதிதாக 24 பேரை தெரிவு செய்துள்ளதாகவும் அந்த பணிக்காக 740 விண்ணப்பங்கள் கிடைத்தன எனவும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
விமான பயண கட்டுப்பாட்டாளர்களாக இணைத்துக்கொள்ளபடுவோர், தகவல் தொழிற்நுட்பம், பூகோளவியல் அல்லது கணிதவியல் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன் ஆங்கி அறிவும் அத்தியவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.