ராஜபக்சக்களுடன் தொடர்புடைய புதிய அரசாங்கம்! ஆபத்தினை எதிர்கொள்ளும் இலங்கை அரசியல்: எச்சரிக்கும் பிட்ச் தரப்படுத்தல்
ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அகற்றப்பட்டனர் ஆனால் ராஜபக்ச அரசாங்கத்துடன் தொடர்புள்ளதால் இந்த நிர்வாகத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாத நிலை காணப்படுகின்றது என பிட்ச் தரப்படுத்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கத்திற்கு ராஜபக்ச குடும்பத்துடன் உள்ள தொடர்புகள் காரணமாக இலங்கை அரசியல் ஆபத்தினை எதிர்கொள்கின்றது எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மக்கள் ஆதரவில்லாத அரசாங்கம்
இலங்கை நாணய நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வது தொடர்பில் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. வலுவான பெரும்பான்மையுடன் கடினமான புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.
புதிய ஜனாதிபதிக்கு பெரும்பான்மை உள்ளமை நாடாளுமன்றத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலரையும் உள்வாங்கியுள்ளது என பிட்ச் தெரிவித்துள்ளது.
இது பொருளாதார ஸ்திரதன்மை மற்றும் கடன் பேண்தகுதன்மை ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும் கடினமான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்குமான போதிய ஆதரவு அரசாங்கத்திற்கு காணப்படும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது.
இவ்வாறான சீர்திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஆதரவு கிடைக்கும் நிலையை ஏற்படுத்தலாம், இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு இது அவசியமானது என நாங்கள் கருதுகின்றோம் என பிட்ச் தெரிவித்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அகற்றப்பட்டனர். ஆனால் ராஜபக்ச அரசாங்கத்துடன் தொடர்புள்ளதால் இந்த நிர்வாகத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாத நிலை காணப்படுகின்றது.
அரசாங்கத்திற்கு நாடாளுமன்ற ஆதரவு வலுவானதாக காணப்படுகின்றது ஆனால் மக்கள் ஆதரவு மிகவும் பலவீனமானதாக உள்ளது எனவும் பிட்ச் தரப்படுத்தல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களால் பதவியில் இருந்து அகற்றப்பட்ட ஆட்சியின் பிரதமரே தற்போதைய ஜனாதிபதி
ஆர்ப்பாட்டக்காரர்களால் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்தவர் தற்போதைய ஜனாதிபதி- நாடாளுமன்றமும் அமைச்சரவையும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் காணப்படுகின்றன.
இந்த கட்சி ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளது. பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அல்லது சீர்திருத்தங்களிற்கு பொதுமக்களின் எதிர்ப்பு உருவானால் ராஜபக்ச குடும்பத்துடனான அரசாங்கத்தின் தொடர்புகளால் நாட்டை ஸ்திரமிழக்கச் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் மூழக்கூடும் எனவும் பிட்ச் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணயநிதியத்துடன் இலங்கை இணக்கப்பாட்டிற்கு வரக்கூடிய சீர்திருத்தங்கள் உயர்வரிகள், செலவுகளை கட்டுப்படுத்துதல் நாணயமாற்று விகிதத்தில் நெகிழ்ச்சி தன்மைக்கான அர்ப்பணிப்பு போன்றவற்றை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கின்றோம். இதற்கு கடும் எதிர்ப்பு உருவாகலாம் இதனால் இவற்றை நடைமுறைப்படுத்துவது பாதிக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.