இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீன கப்பலுக்கு அனுமதி வழங்கியது இலங்கை
இந்தியாவின் எதிர்ப்பிற்கு வழிவகுத்த சீன ஆய்வுக் கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் இன்று (31) உறுதிப்படுத்தியுள்ளன.
பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என கருதப்பட்ட நிலையில் குறித்த கப்பலின் வருகைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நேரத்தில் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை சுதந்திரமாக நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க வரும் யுவான் வாங்-5 என்ற கப்பல் ஆகஸ்ட் 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளது.
கப்பலின் வருகைக்கு இந்தியா எதிர்ப்பு
எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வாரத்திற்கு நங்கூரமிடப்பட உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பலின் வருகைக்கு எதிராக இந்தியாவும் இலங்கை அரசாங்கத்திடம் வாய்மொழி எதிர்ப்பை சமர்ப்பித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகை அடிப்படையில் சீனா கையகப்படுத்தியதன் பின்னர் அதனை சீன இராணுவ தளமாக பேணுவதில் இந்தியா சந்தேகம் கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், சட்டரீதியாக மேற்கொள்ளப்படும் கடல்சார் நடவடிக்கைகளில் எந்தவொரு தரப்பினரும் தலையிட மாட்டார்கள் என தமது நாடு எதிர்பார்ப்பதாக சீனா ஏற்கனவே கூறியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய யுவான் வாங்-5 கப்பலுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் இன்று உறுதிப்படுத்தியுள்ளன.
யுவான் வாங்-5 என்பது சீனாவால் தயாரிக்கப்பட்ட சிறப்புக் கப்பல்களில் ஒன்றாகும், மேலும் இது விண்வெளி செயற்கைக்கோள் தரவு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தரவு கையகப்படுத்தல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இலங்கை எந்தப் பக்கமும் நிற்கக் கூடாது
சீனாவின் பாதுகாப்பு அமைப்புகளின் நவீனமயமாக்கல் குறித்து அமெரிக்க பென்டகன் வெளியிட்ட அறிக்கையின்படி, யுவான் வாங் வகை கப்பல்கள் சீன விடுதலை இராணுவத்தின் மூலோபாயப் படையால் இயக்கப்படுகின்றன.
இந்தக் கப்பலின் வருகை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வெளிநாடுகளுக்கு இடையிலான அதிகாரச் சண்டையில் இலங்கை எந்தப் பக்கமும் நிற்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் சீனப் படைகள் செயற்படுவதே பாதுகாப்பு விடயத்தில் இந்தியா நியாயமான கவனம் செலுத்துவதற்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கையில் சீனப் படைகளுக்கு இடம் வழங்கி நிலைமையை உறுதிப்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.
Chinese space-craft tracking ship Yuanwang-5 entering the Hambantota harbour on 11 August has again given rise to tensions in the region. We do not take sides with regard to power struggles between other countries. 1/2
— TNAMedia (@TNAmediaoffice) July 31, 2022
இந்தியப் பெருங்கடலில் சீனா இராணுவ நடவடிக்கைகள் மற்றும் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்தியா முன்பு குற்றம் சாட்டியது, மேலும் 2014 இல், அணுசக்தியால் இயங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு இந்தியாவும் எதிர்ப்பு தெரிவித்தது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இந்தியாவும் சீனாவும் இலங்கைக்கு கணிசமான நிதியுதவியை வழங்கியதன் பின்னணியில் இலங்கை அரசாங்கம் சுதந்திரமாக வெளிவிவகாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.